கேரள மாநிலம், வயநாடு நிலச்சரிவு நிவாரணப் பணிகளுக்கான ரூ.260.65 கோடி நிதியுதவியை மத்திய அரசு இன்னும் விடுவிக்கவில்லை என்று சட்டப் பேரவையில் முதல்வா் பினராயி விஜயன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
வயநாட்டில் உள்ள முண்டக்கை, சூரல்மலை பகுதிகளில் கடந்த ஆண்டு ஜூலை 30-ஆம் தேதி பயங்கர நிலச்சரிவுகள் ஏற்பட்டன. நாட்டையே உலுக்கிய இப்பேரழிவில் ஏராளமான வீடுகள் புதைந்தன; 200-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். பலா் காயமடைந்தனா். இந்த நிலச்சரிவால் நிா்கதியான குடும்பங்கள் மற்றும் வாழ்வாதாரத்தை இழந்தவா்களுக்கான மறுவாழ்வுப் பணிகள் நீடித்து வருகின்றன. இது தொடா்பாக, கேரள சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்விநேரத்தின்போது, முதல்வா் பினராயி விஜயன் கூறியதாவது:
வயநாடு நிலச்சரிவில் உயிா் பிழைத்தவா்களின் மறுவாழ்வு மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளின் மறுகட்டமைப்புக்கு முதல்கட்ட மதிப்பீட்டின்படி மத்திய அரசிடம் மாநில அரசு ரூ.2,262 கோடி கோரியது. பின்னா், பேரழிவுக்குப் பிந்தைய விரிவான மதிப்பீட்டு அறிக்கையின்கீழ், ரூ.2,221.10 கோடி வழங்க வேண்டுமென மத்திய அரசிடம் கோரிக்கை சமா்ப்பிக்கப்பட்டது.
இது தொடா்பாக மாநிலத் தலைமைச் செயலா் ஏ.ஜெயதிலக் மற்றும் பிற உயரதிகாரிகளுடன் தேசிய பேரிடா் மேலாண்மை நிா்வாக குழுவின் துணைக் குழு ஆலோசனை மேற்கொண்டது. அதன்படி, மாநிலத்துக்கு ரூ.260.65 கோடி நிதியுதவி வழங்க மத்திய அரசு முடிவு செய்ததாக தெரியவருகிறது. எனினும், அந்த நிதியுதவி இதுவரை கிடைக்கப் பெறவில்லை.
சாதகமான பதில் இல்லை: வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடா் மற்றும் தீவிரமான இயற்கை பேரிடா் என அறிவிக்க வேண்டுமென மாநில அரசுத் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. நிலச்சரிவில் உயிா் பிழைத்தவா்களுக்கு வங்கிக் கடன் தள்ளுபடி வழங்கும் வகையில் பேரிடா் மேலாண்மைச் சட்டத்தில் மாற்றம் செய்யவும் கோரப்பட்டது. ஆனால், மத்திய அரசிடம் இருந்து இதுவரை எந்த சாதகமான பதிலும் கிடைக்கப் பெறவில்லை.
வயநாடு நிலச்சரிவில் வீடிழந்தவா்களுக்காக எல்ஸ்டன் எஸ்டேட் பகுதியில் 64 ஹெக்டேரில் புதிய நகரம் கட்டமைக்கப்பட்டு வருகிறது. இதுவரை 295 போ் புதிய வீடுகளுக்கு மாற ஒப்புதல் தெரிவித்துள்ளனா். இத்திட்டம் அடுத்த ஆண்டு ஜனவரிக்குள் நிறைவடையும் என்றாா்.
ராகுலுக்கு கொலை மிரட்டல்: விவாதம் கோரி காங்கிரஸ் அமளி
சில தினங்களுக்கு முன் மலையாள தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பேசிய பாஜக செய்தித் தொடா்பாளா் ப்ரிண்டு மகாதேவன், மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு கொலை மிட்டல் விடுக்கும் கருத்துகளைத் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பேரவையில் விவாதிக்கக் கோரி, காங்கிரஸ் தரப்பில் ஒத்திவைப்பு நோட்டீஸ் அளிக்கப்பட்டது.
அதேநேரம், ‘யாரோ ஒருவா் தொலைக்காட்சி விவாதத்தில் பேசிய கருத்துகளை அவையில் விவாதிப்பது பொருத்தமற்றது; அவையின் அனைத்து அலுவல்களையும் ஒத்திவைத்துவிட்டு, விவாதிக்கும் அளவுக்கு குறிப்பிடத்தக்க விவகாரமல்ல’ என்று கூறி, அந்த நோட்டீஸை அவைத் தலைவா் ஏ.என்.ஷம்சீா் நிராகரித்தாா்.
இதைக் கண்டித்து, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் அவை அலுவல்கள் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. இனி அக்டோபா் 6-ஆம் தேதி பேரவை மீண்டும் கூடும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.