விமான எரிபொருள் விலை இருமடங்கு உயர்வு! விமானக் கட்டணம் உயர வாய்ப்பு!!
மேற்காசியாவில் நிலவும் போர்ப்பதற்றம் காரணமாக விமான எரிபொருளின் விலை இரண்டு மடங்கு உயர்ந்துள்ளதைப் பற்றி...
மேற்காசியாவில் நிலவும் போர்ப்பதற்றம் காரணமாக விமான எரிபொருளின் விலை இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. இதனால், விமானக் கட்டணங்களும் உயரும் அச்சம் உருவாகியுள்ளது.
ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேலின் கூட்டுத்தாக்குதலைத் தொடர்ந்து மத்திய கிழக்கு மற்றும் மேற்காசியாவில் தொடர்ந்து போர்ப்பதற்றம் நிலவி வருகிறது.
உலக வர்த்தகத்தில் மிகவும் முக்கிய கடல் வழிப்பாதையான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியதால், இந்தியா, சீனா உள்ளிட்ட அதிகளவிலான மக்கள் தொகை கொண்ட நாடுகள் கடுமையான விளைவுகளைச் சந்தித்தன. மேலும், சமையல் எரிவாயு, டீசல், பெட்ரோல் உள்ளிட்டவைகளின் விலையும் கணிசமாக உயர்ந்தது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், மேற்காசியப் போரின் எதிரொலியாக விமான டர்பைன் எரிபொருளின் விலை, இன்று (ஏப். 1) முதல் ஒரு கிலோலிட்டருக்கு இரண்டு மடங்கு உயர்ந்து ரூ.2.07 லட்சம் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
விமான எரிபொருள் சில்லறை விற்பனையாளர்கள் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, தலைநகர் தில்லியில் விமான டர்பைன் எரிபொருளின் விலை ஒரு கிலோலிட்டருக்கு ரூ.1,10,703-லிருந்து 114.5 சதவிகிதம் அதிகரித்து ரூ. 2,07,341 ஆக உயர்ந்துள்ளது. விமான டர்பைன் எரிபொருளின் விலை ரூ. 2 லட்சத்தைக் கடப்பது இதுவே முதல்முறை.
இதற்கு முன்னதாக, 2022 ஆம் ஆண்டில் உக்ரைன் மீது ரஷியா போர்த் தொடுத்ததையடுத்து கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது. அப்போது முதல்முறையாக ஒரு கிலோலிட்டர் ரூ. 1.1 லட்சமாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
நிகழாண்டு தொடங்கி மூன்று மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இரண்டாவது முறையாக விமான டர்பைன் எரிபொருளின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. மார்ச் 1 ஆம் தேதி கிலோ லிட்டருக்கு 5.7 சதவிகிதம் (ரூ. 5,244.75) உயர்த்தப்பட்டது.
அமெரிக்கா - ஈரான் போர், ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் விமான எரிபொருள் கடுமையான விலை ஏற்றம் கண்டுள்ளதால், இன்று முதல் விமானக் கட்டணங்கள் அதிகரிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது.