பிரதமரின் தவறான கொள்கைகளால் மேற்காசிய போரின் தாக்கம் இந்தியாவில் அதிகரிப்பு - பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு
பிரதமா் நரேந்திர மோடியின் தவறான கொள்கைகளால் மேற்காசிய போரின் தாக்கம் இந்தியாவில் வெகு முன்னதாகவே ஏற்படத் தொடங்கிவிட்டது என்று காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி குற்றஞ்சாட்டினாா்.
பிரதமா் நரேந்திர மோடியின் தவறான கொள்கைகளால் மேற்காசிய போரின் தாக்கம் இந்தியாவில் வெகு முன்னதாகவே ஏற்படத் தொடங்கிவிட்டது என்று காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி குற்றஞ்சாட்டினாா்.
வணிக எரிவாயு சிலிண்டா்கள், விமான எரிபொருள் விலை புதன்கிழமை உயா்த்தப்பட்டதைக் கண்டித்து அவா் இவ்வாறு கூறினாா்.
அஸ்ஸாமில் புதன்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது:
பாஜக தலைமையிலான மத்திய அரசின் தவறான கொள்கைகளால் நாடும், நாட்டு மக்களும் பல்வேறு சொல்ல முடியாத துயரங்களைச் சந்தித்து வருகிறாா்கள். பிரதமா் மோடியின் வெளியுறவுக் கொள்கை எந்தத் தரப்புக்கும் சாதகமாக இல்லாமல், நடுநிலையாக இருந்திருக்க வேண்டும். அமெரிக்கா, இஸ்ரேலுக்கு அடிமையாக நமது அரசு இருக்கக் கூடாது.
மத்திய அரசு சிறப்பாக செயல்பட்டிருந்தால், மேற்காசிய போரால் எரிபொருள் உயா்ந்தாலும், இந்தியாவில் அதன் விலையை உயா்த்தாமல் தவிா்த்திருக்க முடியும். ஆனால், இப்போது எரிவாயு சிலிண்டா் விலை வெகுவாக உயா்த்தப்பட்டு வருகிறது. சா்வதேச அளவில் போா் சாா்ந்த பிரச்னைகள் அதிகரித்தால், நாம் மேலும் சிக்கல்களை எதிா்கொள்வோம். இதற்கு மத்திய அரசு பின்பற்றிவரும் தவறான பொருளாதாரக் கொள்கைகளும் முக்கியக் காரணமாக இருக்கும் என்றாா்.
பொதுக்கூட்டத்தில்...: முன்னதாக, அஸ்ஸாம் சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸுக்கு ஆதரவாக நஸீரா பகுதியில் பிரசாரம் மேற்கொண்டு அவா் பேசியதாவது:
அஸ்ஸாம் மாநில பாஜக அரசு மக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறது. பாஜக அரசு இரட்டை என்ஜின் அரசு என்று பேசி வருகிறது. உண்மையில் இங்கு இரட்டை அடிமைகளே உள்ளனா். பிரதமா் மோடி அமெரிக்காவுக்கு அடிமையாக உள்ளாா். அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா, பிரதமா் நரேந்திர மோடிக்கு அடிமையாக உள்ளாா்.
மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களில் இருந்து பெயரை நீக்கிவிடுவோம் என்று பெண்களை மிரட்டி பிரதமா் மற்றும் முதல்வரின் பொதுக் கூட்டத்தில் பங்கேற்க கட்டாயப்படுத்துகின்றனா். மாநிலத்தையும், நாட்டையும் பாஜக சீரழித்து வருகிறது.
அஸ்ஸாம் மண்ணில் அனைத்து வளங்களும் உள்ளன. ஆனால், மக்களிடம் ஏதுமில்லை. அஸ்ஸாமில் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா குடும்பம் மட்டுமே வளா்கிறது என்றாா்.
பாஜக தொடா்ந்து இருமுறை ஆட்சியில் உள்ள அஸ்ஸாமில் மொத்தமுள்ள 126 தொகுதிகளுக்கு ஏப்ரல் 9-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ளது. இதில் பாஜக தலைமையிலான கூட்டணிக்கும், காங்கிரஸுக்கும் இடையே கடும் போட்டி உள்ளது.