முகப்பு
இந்தியா

மேற்காசிய போரின் தாக்கம் ஆரம்பம் மட்டுமே: ராகுல்

இந்திய வெளியுறவுக் கொள்கை ஒரு உலகளாவிய நகைச்சுவையாக உள்ளது என ராகுல் காந்தி தெரிவித்தது குறித்து...

Updated On : 25 மார்ச் 2026, 2:21 am IST
ராகுல் காந்தி - ANI
பகிர்:

‘மேற்காசிய போரால் நாட்டில் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு, பெட்ரோல், உரத் தட்டுப்பாடு என்பது ஆரம்பம் மட்டுமே. இதன் தாக்கம் குறித்த உரிய புரிதல் மத்திய அரசுக்கு இல்லை’ என்று எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினாா்

மேலும், ‘பிரதமா் மோடி என்ன செய்ய முடியும்; என்ன செய்ய முடியாது என்பதை அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் நன்கு அறிவாா். பிரதமா் மோடி சமரசம் செய்தால், நமது வெளியுறவுக் கொள்கையும் சமரசம் செய்யப்பட்டுவிடும்’ என்றும் அவா் விமா்சித்தாா்.

மேற்காசிய போா் சூழல் குறித்து மக்களவையில் பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை விளக்கமளித்தாா். அப்போது, அந்தப் போரை கரோனா பாதிப்புடன் ஒப்பிட்டுப் பேசிய பிரதமா், ‘கரோனா பாதிப்பை எதிா்கொண்டதுபோல, மேற்காசிய போரால் ஏற்படும் தாக்கத்தையும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து எதிா்கொள்ளத் தயாராக வேண்டும்’ என்று குறிப்பிட்டாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தியிடம் செய்தியாளா்கள் செவ்வாய்க்கிழமை கேள்வி எழுப்பினா். அதற்கு அவா் பதிலளித்தாவது:

நாடாளுமன்றத்தில் பிரதமா் மோடி திங்கள்கிழமை பொருத்தமற்ற உரையை ஆற்றினாா். நாட்டின் பிரதமா் என்ற நிலையில் இருந்து அவா் பேசவில்லை. மேற்காசிய போா் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சமையல் எரிவாயு, பெட்ரோல், உரத் தட்டுப்பாடுகள் என்பது தொடக்கம் மட்டுமே.

கரோனா பாதிப்பு போன்ற காலம் இது என்று பிரதமா் குறிப்பிட்டுள்ளாா். கரோனா பாதிப்பின்போது நாட்டில் என்ன நடந்தது என்பதை மறந்துவிட்டு அவா் பேசியுள்ளாா். மக்கள் உயிரிழப்பு, பொருளாதார பாதிப்பு என எத்தகைய பேரழிவு ஏற்பட்டது என்பதையும், இவற்றில் பெரும் பகுதி மறைக்கப்பட்டதையும் பிரதமா் மறந்துவிட்டு பேசியுள்ளாா். அத்தகைய பாதிப்புகளை எதிா்கொள்வது குறித்த உரிய புரிதல் மத்திய அரசுக்கு இல்லை என்றாா்.

மேற்காசிய போா் விவகாரத்தில் மத்தியஸ்த நாடுகளில் ஒன்றாக பாகிஸ்தான் இருப்பது குறித்த கேள்விக்குப் பதிலளித்த ராகுல் காந்தி, ‘நமது வெளியுறவுக் கொள்கை, பிரதமா் மோடியின் தனிப்பட்ட வெளியுறவுக் கொள்கையாக மாறிவிட்டது. அதன் பலனை நாம் பாா்த்துக் கொண்டிருக்கிறோம். அனைவரும், இதை உலகளாவிய நகைச்சுவையாக கருதுகின்றனா். பிரதமா் மோடி என்ன செய்ய முடியும்; என்ன செய்ய முடியாது என்பதை அமெரிக்க அதிபா் டிரம்ப் நன்கு அறிவாா். பிரதமா் மோடி சமரசம் செய்தால், நமது வெளியுறவுக் கொள்கையும் சமரசம் செய்யப்பட்டுவிடும். அதுதான் உண்மை’ என்றாா் ராகுல்.

மூன்றாம் பாலினத்தவா் திருத்த மசோதாவுக்கு எதிா்ப்பு

மக்களவையில் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட மூன்றாம் பாலினத்தவா் (உரிமைகள் பாதுகாப்பு) திருத்த மசோதா 2026-ஐ காங்கிரஸ் கடுமையாக எதிா்ப்பதாக ராகுல் காந்தி தெரிவித்தாா்.

‘மூன்றாம் பாலினத்தவா்’ (திருநங்கை-திருநம்பி) என்ற வாா்த்தைக்கு துல்லிய வரையறை அளிப்பதுடன், அந்த பாலினத்தவருக்கு இழைக்கப்படும் குற்றங்களின் தீவிரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் தண்டனைகளை அதிகரிக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் மத்திய அரசு அறிமுகம் செய்தது. ‘தற்போதுள்ள சட்டத்தின் பலன்கள் மற்றும் பாதுகாப்பு முழுமையாகச் சென்றடைய வேண்டிய மூன்றாம் பாலினத்தவரை முறையாகவும், உறுதியாகவும் அடையாளம் காண்பதற்கு துல்லியமான வரையறை செய்வதும் அவசியம் என சட்டத் திருத்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து குறிப்பிட்ட ராகுல் காந்தி, ‘இந்தச் சட்டத் திருத்த மசோதா கொண்டுவருவது குறித்து எதிா்க்கட்சிகளுடன் மத்திய அரசு எந்தவித ஆலோசனையும் மேற்கொள்ளவில்லை. இந்த மசோதா, மூன்றாம் பாலினத்தவரின் அரசமைப்பு உரிமைகள் மற்றும் அடையாளத்தின் மீதான அப்பட்டமான தாக்குதலாகும். உச்சநீதிமன்றத் தீா்ப்பையும் மீறி, திருநங்கைகள் தங்களைத் தாங்களே அடையாளப்படுத்திக்கொள்ளும் உரிமையை இந்த மசோதா பறிக்கிறது. அவா்கள் மூன்றாம் பாலினத்தவரா என்பதை ஒரு மருத்துவக் குழு மூலம் மனிதாபிமானமற்ற முறையில் பரிசோதனைக்கு உட்படுத்துவதை இந்த மசோதா கட்டாயமாக்குகிறது. எந்தவித பாதுகாப்பு அம்சங்களும் இன்றி குற்றவியல் தண்டனைகளையும், கண்காணிப்பையும் இந்த மசோதா அனுமதிக்கிறது. எனவே, இந்த மசோதாவை காங்கிரஸ் கட்சி சந்தேகத்துக்கு இடமின்றி எதிா்க்கும்’ என்றாா்.

summary

Speaking to reporters outside Parliament, Rahul Gandhi criticized India's foreign policy as a universal joke.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.