முகப்பு
இந்தியா

எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு: எஃப்சிஆர்ஏ திருத்த மசோதா நிறுத்திவைப்பு

வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு முறைப்படுத்துதல் சட்டத் (எஃப்சிஆர்ஏ) திருத்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், அந்த மசோதாவை மத்திய அரசு புதன்கிழமை தற்காலிகமாக நிறுத்திவைத்தது.

Updated On : 2 ஏப்ரல், 2026 at 12:19 AM
பகிர்:

வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு முறைப்படுத்துதல் சட்டத் (எஃப்சிஆர்ஏ) திருத்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், அந்த மசோதாவை மத்திய அரசு புதன்கிழமை தற்காலிகமாக நிறுத்திவைத்தது.

வெளிநாடுகளில் இருந்து தன்னார்வ தொண்டு அமைப்புகளுக்கு வரும் நிதியை முறைப்படுத்த மத்திய அரசால் அந்த சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் கடந்த மாதம் 25-ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த மசோதா, சிறுபான்மையினருக்கு எதிரானது என்று காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள், தேவாலய குழுக்கள் குற்றஞ்சாட்டின. மசோதாவுக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த மசோதா மக்களவையில் புதன்கிழமை பரிசீலனைக்காகப் பட்டியலிப்பட்டது. எனினும் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக மசோதா பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படாது என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.

அவையில் கேள்வி நேரம் தொடங்கியவுடன் எதிர்க்கட்சி எம்.பி.க்கள், குறிப்பாக கேரளத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள் மசோதாவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். ஆனால் தேச நலனை பாதுகாக்க வேண்டும், வெளிநாட்டு நிதி தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளதாக கிரண் ரிஜிஜு கூறினார்.

இதுகுறித்து கேரள பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர் கூறுகையில், "மசோதா குறித்து கிறிஸ்தவர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் கவலை தெரிவித்துள்ளனர். இதைக் கவனத்தில் கொள்ளாமல் மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ளாது. தற்போதைய கட்டத்தில் மசோதாவை நிறைவேற்ற வேண்டாம் என்று மத்திய அரசிடம் கேரள பாஜகவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்' என்று கூறினார்.

இதனிடையே, நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக எம்.பி. தினேஷ் ஷர்மா, அந்த மசோதா சிறுபான்மையினருக்கு எதிரானது என்று எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை நிராகரித்தார். அவர் மேலும் கூறுகையில், "சிறுபான்மையினர், பெரும்பான்மையினர் என எதிர்க்கட்சிகள் போல மத்திய அரசு யாரையும் வேறுபடுத்தி பார்க்கவில்லை. வெளிநாடுகளில் இருந்து வரும் நிதி, அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த பயன்படுத்தப்பட்டாலோ அல்லது நக்ஸல் தீவிரவாதத்துக்கு உதவும் விதமாக பயன்படுத்தப்பட்டாலோ என்ன செய்வது? ஆதலால் தேசப் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு, அதற்கு கட்டுப்பாடு கொண்டு வர வேண்டியுள்ளது' என்றார்.

கேரள மாநிலத்தில் வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. மாநிலத்தில் தேர்தல் வெற்றியைத் தீர்மானிப்பதில் கிறிஸ்தவ அமைப்புகளும் முக்கியப் பங்கு வகிப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.