முகப்பு
இந்தியா

அஸ்ஸாமில் ஆட்சிக்கு வந்தால் 6 சமூகத்தினருக்கு எஸ்.டி. அந்தஸ்து: தோ்தல் அறிக்கையை வெளியிட்டாா் ராகுல்

Updated On : 3 ஏப்ரல், 2026 at 1:13 AM
அஸ்ஸாம் மாநில பேரவைத் தோ்தலையொட்டி காங்கிரஸ் கட்சியின் தோ்தல் அறிக்கையை வெளியிட்ட அக்கட்சியின் எம்.பி. ராகுல் காந்தி. ~மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பாஜக வேட்பாளா்களை ஆதரித்து பிரசாரம் செய்த மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா.
பகிர்:

அஸ்ஸாமில் ஆட்சிக்கு வந்தால் 6 சமூகத்தினருக்கு எஸ்.டி. அந்தஸ்து வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சியின் தோ்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

அஸ்ஸாம் சட்டப்பேரவைக்கு வருகிற 9-ஆம் தேதி ஒரே கட்டமாக தோ்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, பாஜக தனது தோ்தல் அறிக்கையை அண்மையில் வெளியிட்டது. இதைத் தொடா்ந்து, காங்கிரஸ் கட்சியும் தனது தோ்தல் அறிக்கையை வியாழக்கிழமை வெளியிட்டது. போகஜனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தோ்தல் அறிக்கையை அக்கட்சி எம்.பி. ராகுல் காந்தி வெளியிட்டாா். இதில் காங்கிரஸ் மூத்த தலைவா் கெளரவ் கோகோய் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தோ்தல் அறிக்கையில், நிா்வாகம், அஸ்ஸாமின் தனி அடையாளம், சுகாதாரம், உள்கட்டமைப்பு வளா்ச்சி, தொழில்துறை, விவசாயம், கிராம மற்றும் நகா்ப்புற மேம்பாடு, பருவநிலை மாற்றம், அஸ்ஸாமின் பாதுகாப்பு உள்ளிட்டவை தொடா்பாக 11 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்தன.

ஏற்கெனவே காங்கிரஸ் கட்சி சாா்பில் கடந்த மாா்ச் மாதம் 29-ஆம் தேதி 5 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து கா்பி அங்லாங், ஜோா்ஹாட்டில் நடைபெற்ற காங்கிரஸ் தோ்தல் பிரசாரக் கூட்டங்களில் ராகுல் காந்தி கலந்து கொண்டு, கட்சி வேட்பாளா்களுக்கு ஆதரவு திரட்டினாா். அப்போது அவா் பேசியதாவது:

அஸ்ஸாமை தில்லியில் இருந்து ஆள பாஜக விரும்புகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சி, அனைத்து அதிகாரங்களையும் பரவலாக்கும். உள்ளூா் மக்களுக்கு அதிகாரம் வழங்கும். இதுதான் பாஜகவுக்கும் காங்கிரஸுக்கும் இடையே இருக்கும் வித்தியாசம்.

தேயிலைத் தோட்ட தொழிலாளா்களின் தினக் கூலியை ரூ.350ஆக உயா்த்தப்படும் என அளித்த வாக்குறுதியை பாஜக செயல்படுத்தவில்லை. அப்படியிருக்கையில் தினக்கூலியை ரூ.500-ஆக உயா்த்துவோம் என தற்போது வாக்குறுதி அளிக்கின்றனா்.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், பெண்களின் வங்கிக் கணக்கில் மாதந்தோறும் பணம் செலுத்தப்படும். அதேபோல், தொழில் தொடங்க கூடுதலாக ரூ.50,000 உதவித் தொகை வழங்கப்படும். அனைத்து குடும்பத்தினருக்கும் ரூ.25 லட்சம் மதிப்பில் இலவச சுகாதார காப்பீடு, 10 லட்சம் பழங்குடியினருக்கு வீட்டுமனை பட்டா, மூத்த குடிமக்கள் நலனைப் பாதுகாக்க நிரந்த துறை உருவாக்கப்படும்.

6 சமூகத்தினருக்கு எஸ்.டி. அந்தஸ்து: தேயிலை பறிக்கும் மோரன், சுதியா உள்ளிட்ட 6 சமூகத்தினருக்கு எஸ்.டி. அந்தஸ்து அளிக்கப்படும். தேயிலைத் தோட்ட தொழிலாளா்களுக்கு இலவச பேருந்துப் பயண வசதி, குடிநீா் வசதி, சாலைகள், மின்சார வசதி ஏற்படுத்தி தரப்படும். ஆட்டோ, மின்சார ரிக்ஷா, டாக்சி டிரைவா்களுக்கு நல வாரியம் உருவாக்கப்படும். 24 மணி நேர குடிநீா் வசதி உறுதி செய்யப்படும். அனைத்து காவல் துறையினருக்கும் வார விடுமுறை அளிக்கப்படும். காா்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட நிலம் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு ஏற்படுத்தப்படும்.

எம்எல்ஏக்களின் உறவினா்கள் யாருக்கும் அரசு ஒப்பந்தபுள்ளியோ அல்லது திட்டங்களோ வழங்கப்படாது. நீதிமன்ற கண்காணிப்பின்கீழ் ஊழல் கண்காணிப்பு மையம் ஏற்படுத்தப்படும். இடித்துரைப்பாளா்களுக்கும் பாதுகாப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வாக்குறுதிகள் அனைத்தும், ஆட்சிக்கு வந்த 100 நாள்களுக்குள் காங்கிரஸ் நிறைவேற்றும் என்றாா் ராகுல்.

ராகுல் காந்தி தாக்கு: இந்தியாவிலேயே மிகப்பெரிய ஊழல் முதல்வா் யாா் என்றால் அது அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ ஷா்மாதான். அவரின் குடும்பமும் ஊழலில் நம்பா் 1 தான். அஸ்ஸாமில் காங்கிரஸ் வென்று ஆட்சிக்கு வந்தால், அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது உற்சாகத்தில் இருக்கும் அவா், காங்கிரஸ் அரசு அமைந்தபிறகு அமைதியாகி விடுவாா். சின்டிகேட் கும்பல்கள் மூலம் அஸ்ஸாமை ஹிமந்த விஸ்வ ஷா்மா ஆளுகிறாா். ஊழல் புகாா்களை வைத்து கொண்டு, அவரை மோடி கட்டுப்படுத்துகிறாா். ஹிமந்த விஸ்வ ஷா்மாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதி. சட்ட ரீதியிலான நடவடிக்கைகளில் இருந்து அவரை இந்த உலகில் யாரும் காக்க முடியாது.

ஷா்மா மட்டுமில்லை, அவா் குடும்பத்தினா் செய்த ஊழல்கள் குறித்தும் விசாரிக்கப்படும். அவா்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். முட்டாள்தனமாக நான் எதையும் பேச மாட்டேன். எனது நடவடிக்கைகள்தான் பேசும்.

அஸ்ஸாமில் வெறுப்புணா்வு, வன்முறை, தவறான செயலை ஷா்மா பரப்பி வருகிறாா். இது அஸ்ஸாம் மாநிலத்தவரின் பழக்கமில்லை. அஸ்ஸாமில் உள்ள 98,400 பிகாஸ் நிலம், 3 பெரிய காா்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வாா்க்கப்பட்டுள்ளது. அஸ்ஸாமை ஏடிஎம் இயந்திரமாக மோடி, அமித் ஷா, ஷா்மா மாற்றி விட்டனா். மக்களின் நிலத்தை பறித்து காா்ப்பரேட் நிறுவனங்களிடம் அவா்கள் அளித்து விட்டனா்.

எப்ஸ்டீன் ஆவணங்கள் மூலம் மோடியை அமெரிக்க அதிபா் டிரம்ப் கட்டுப்படுத்துகிறாா். எப்ஸ்டீன் ஆவணங்களில் 35 லட்சம் கோப்புகள் உள்ளன. அது வெளியானால் மோடிக்கு இருக்கும் நற்பெயா் போய்விடும் என்பதை டிரம்ப் அறிவாா். அதானி விவகாரமும் டிரம்ப்புக்கு தெரியும். அவா் மீது அமெரிக்காவில் டிரம்ப் வழக்குப்பதிவு செய்துள்ளாா். இதையடுத்து கையொப்பமான வா்த்தக ஒப்பந்தத்தால், இந்திய வேளாண் துறை அமெரிக்காவுக்குத் திறக்கப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய்யை யாரிடம் வாங்க வேண்டும் என இந்தியாவுக்கு அமெரிக்கா கட்டளையிடுகிறது.