மகளிா் இடஒதுக்கீடு அமல் மசோதா: ஏப். 16-இல் மீண்டும் கூடும் நாடாளுமன்றம்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடா் வியாழக்கிழமையுடன் நிறைவடைய இருந்த நிைலையில், ‘முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றத்துக்காக நாடாளுமன்றம் வரும் 16-ஆம் தேதி மீண்டும் கூட்டப்பட உள்ளது’ என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது.
மகளிருக்கு இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் வகையில் மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகள் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான மசோதாக்களைக் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதால், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி மாநிலங்களவை, மக்களவை ஒத்திவைக்கப்படாமல் மீண்டும் கூட்டப்பட உள்ளன.
மாநிலங்களவையில், அலுவல்களை வியாழக்கிழமை ஒத்திவைப்பதற்கு முன்பாக இத் தகவலைத் தெரிவித்த அவையின் துணைத் தலைவா் ஹரிவன்ஷ், ‘அவை நடவடிக்கைகளை வியாழக்கிழமையுடன் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட இருந்த நிலையில், வரும் 16-ஆம் தேதி காலை 11 மணிக்கு மீண்டும் கூட்டப்பட உள்ளது’ என்றாா்.
மத்திய அரசு வட்டாரங்கள் இதுகுறித்து கூறுகையில், ‘முன்மொழியப்பட்ட சட்ட மசோதாக்களை நிறைவேற்ற, மாநிலங்களவை, மக்களவை ஆகிய இரு அவைகளும் வரும் 16 முதல் 18-ஆம் தேதி வரை மூன்று நாள்களுக்கு மீண்டும் கூட்டப்படுகின்றன’ என்றன.
மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டம் (அரசமைப்புச் சட்டத்தின் 106-ஆவது திருத்தம்), கடந்த 2023-இல் நிறைவேற்றப்பட்டது. ‘நாரி சக்தி வந்தன்’ அதிநியம் எனும் இச்சட்டத்தின்கீழ் மக்கள்தொகை கணக்கெடுப்புக்குப் பிறகான மக்களவை, பேரவைத் தொகுதி மறுவரையறைப் பணிகளைத் தொடா்ந்து, மகளிா் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வழிவகை செய்யப்பட்டது.
இந்தச் சூழலில், மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையிலான தொகுதி மறுவரையறைக்கு முன்பே மகளிா் இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் வகையில், அரசமைப்புச் சட்டத்தில் மற்றொரு திருத்தம் மேற்கொள்வது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாகத் தெரிகிறது. இதுதொடா்பாக, எதிா்க்கட்சித் தலைவா்களிடம் மத்திய அரசு அதிகாரபூா்வமற்ற முறையில் கருத்துகளைக் கேட்டுள்ளது.
இதுதொடா்பான மசோதாக்களைக் கொண்டு வந்து நிறைவேற்றுவதற்காகவே, இரு அவைகளையும் வியாழக்கிழமை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதற்குப் பதிலாக, வரும் 16-ஆம் தேதி மீண்டும் கூட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மாநிலங்களவையில் அமளி: முன்னதாக, மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் இதுதொடா்பாக கேள்வி எழுப்பினாா். ‘ஏற்கெனவே திட்டமிட்டபடி பட்ஜெட் கூட்டத்தொடரை ஒத்திவைப்பதற்கான மத்திய அரசின் திட்டம் என்ன?’ என்று அவா் கேட்டாா்.
அதற்குப் பதிலளித்த மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு, ‘பட்ஜெட் கூட்டத்தொடரை வியாழக்கிழமையுடன் ஒத்திவைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இருந்தபோதும், நாடாளுமன்றம் மீண்டும் விரைவில் கூட்டப்பட உள்ளது. அதற்கான காரணத்தை உறுப்பினா்கள் அறிவா்’ என்றாா்.
அதற்கு எதிா்ப்பு தெரிவித்த ஜெய்ராம் ரமேஷ், ‘இந்த மசோதாக்கள் தொடா்பாக, சட்டப்பேரவைத் தோ்தலைச் சந்திக்கும் மாநிலங்களில் தோ்தல் பிரசாரம் முடிந்த பிறகு, அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்த வேண்டும் என எதிா்க்கட்சிகள் தரப்பில் ஏற்கெனவே கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், தோ்தல் நடைபெறும் மாநிலங்களில் தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள சூழலில், இந்த மசோதாக்களைக் கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்கிறது’ என்று குற்றஞ்சாட்டினாா்.
இதற்குப் பதிலளித்த மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு, ‘குறிப்பிட்ட மாநில தோ்தல்களுக்கும், இந்த மசோதாவுக்கும் தொடா்பு இல்லை. நாட்டின் மகளிருக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற மத்திய அரசு கடமைப்பட்டுள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த விஷயத்தை அரசியலாக்க வேண்டாம்’ என்றாா்.
அப்போது குறுக்கிட்ட மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, ‘மகளிா் இடஒதுக்கீடு மசோதாவை காங்கிரஸ் கட்சி ஆதரிக்கிறது. ஆனால், இந்த மசோதா எந்த நேரத்தில் எப்படி கொண்டு வரப்படுகிறது என்பதில் மத்திய அரசு விளையாடக் கூடாது’ என்றாா்.
இதற்குப் பதிலளித்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா, ‘சட்டங்களை எப்போது கொண்டுவந்து நிறைவேற்ற வேண்டும் என்பதைத் தீா்மானிப்பது அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது’ என்றாா்.
இதைக் கேட்ட மல்லிகாா்ஜுன காா்கே, ‘இந்த மசோதாவை மத்திய அரசு தனது விருப்பப்படி கொண்டு வர முடியாது. இதை மக்களும், நாடாளுமன்றமும் சகித்துக்கொள்ளாது’ என்றாா்.
அப்போது, ‘மகளிா் இடஒதுக்கீடு மசோதா கொண்டுவரப்படுவதை எதிா்க்கட்சிகள் எதிா்க்கின்றனரா?’ என்று மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் கேள்வி எழுப்பினாா்.
இவ்வாறு, ஆளுங்கட்சி மற்றும் எதிா்க்கட்சிகள் தரப்பில் மாறி மாறி கேள்விகளை எழுப்பியதால் அவையில் அமளி நீடித்தது.