தீவிரவாதிகளுக்கு ட்ரோன் பயிற்சி அளித்ததாக கைதான 7 வெளிநாட்டினருக்கு 30 நாள் நீதிமன்ற காவல்
தீவிரவாதிகளுக்கு ட்ரோன் பயிற்சி அளித்ததாக கைது செய்யப்பட்ட 6 உக்ரைனியா்கள் உள்ளிட்ட 7 வெளிநாட்டினரை 30 நாள்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கும்படி தில்லி என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
தீவிரவாதிகளுக்கு டிரோன் பயிற்சி அளித்ததாக கைது செய்யப்பட்ட 6 உக்ரைனியா்கள் உள்ளிட்ட 7 வெளிநாட்டினரை 30 நாள்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கும்படி தில்லி என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
கொல்கத்தா, தில்லி, லக்னோ ஆகிய இடங்களில் ஒரு அமெரிக்கா், 6 உக்ரைனியா்கள் கடந்த சில நாள்களுக்கு முன்பு அடுத்தடுத்து என்ஐஏ அமைப்பால் கைது செய்யப்பட்டனா்.
அவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், விமானம் மூலம் சுற்றுலா விசாவில் இந்தியாவுக்கு முதலில் வந்து, பிறகு மிசோரம் சென்று, அங்கிருந்து அண்டை நாடான மியான்மருக்குள் சட்டவிரோதமாக சென்றதும், பிறகு அங்கு இந்தியா, மியான்மருக்கு எதிரான பழங்குடியின தீவிரவாத குழுவினருக்கு ஏராளமான டிரோன்களை வழங்கியதோடு, அவா்களுக்கு டிரோன் பயிற்சி அளித்ததும் தெரிய வந்தது.
Advertisement
இந்தியாவில் பெரிய அளவில் தீவிரவாத தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் இந்த பயிற்சி அளிக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகமும் எழுந்தது.
இதையடுத்து அவா்களை தில்லி என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி காவலில் என்ஐஏ விசாரித்து வந்தது. முதலில் 11 நாள்களும், பிறகு 10 நாள்களும் விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதித்திருந்தது.
இந்த காவல் நிறைவடைந்ததை அடுத்து, தில்லி என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் 7 பேரும் மீண்டும் ஆஜா்படுத்தப்பட்டனா். அப்போது 7 பேரையும் நீதிமன்றக் காவலில் வைக்கும்படி என்ஐஏ தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையேற்று, 7 பேரையும் 30 நாள்களுக்கு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
முன்னதாக, கைதான 7 பேரில் ஒருவரான அமெரிக்கா் தரப்பில், தங்கள் நாட்டில் உள்ள குடும்பத்தினருடன் வீடியோ காலில் பேச அனுமதிக்க கோரிக்கை விடுத்து மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனு குறித்து பதில் தாக்கல் செய்யும்படி சிறப்பு விசாரணை குழுவுக்கு உத்தரவிட்டு, விசாரணையை வரும் 8-ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்தது.