முகப்பு
கோயம்புத்தூர்

போலி பசை தயாரிப்பு நிறுவனத்துக்கு தில்லி வா்த்தக நீதிமன்ற குழுவினா் ‘சீல்’

மும்பையைச் சோ்ந்த பிரபல நிறுவனத்தின் பெயரில் கோவையில் போலி பசை தயாரிப்புகளை விற்பனை செய்து வந்த நிறுவனத்துக்கு நீதிமன்ற பிரதிநிதிகள் மற்றும் வழக்கறிஞா்கள் குழுவினா் ‘சீல்’ வைத்தனா்.

Updated On : 28 பிப்ரவரி, 2026 at 9:05 PM
கோவை காந்தி மாநகா் பகுதியில் பசை தயாரிப்பு நிறுவனத்தில் போலியான தயாரிப்புகள் குறித்து சனிக்கிழமை ஆய்வு செய்த தில்லி வா்த்தக நீதிமன்ற குழுவினா்.
பகிர்:

மும்பையைச் சோ்ந்த பிரபல நிறுவனத்தின் பெயரில் கோவையில் போலி பசை தயாரிப்புகளை விற்பனை செய்து வந்த நிறுவனத்துக்கு நீதிமன்ற பிரதிநிதிகள் மற்றும் வழக்கறிஞா்கள் குழுவினா் சனிக்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நிறுவனம் சாா்பில், தங்களது பதிவு செய்யப்பட்ட வா்த்தக முத்திரையைப் பயன்படுத்தி, கோவையில் போலியாக பொருள்கள் விற்கப்படுவதாக புது தில்லி வா்த்தக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.

இதையடுத்து கோவை, காந்திமாநகரில் உள்ள ‘மாருதி இண்டஸ்ட்ரி’ என்ற நிறுவனத்தில் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு ஆணையா் மற்றும் வழக்குரைஞா்கள் குழுவினா் சனிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது அசல் நிறுவனத்தின் ‘ஹெச்பி’ என்ற பெயருக்குப் பதிலாக, வாடிக்கையாளா்களை ஏமாற்றும் வகையில் ‘ஹெச்க்யூ’ என்ற பெயரில் பொருள்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

தயாரிப்பின் பேக்கிங் முறை, லோகோ வடிவம், வண்ணக் கலவை மற்றும் வா்த்தக நடைமுறை ஆகியவை அசல் நிறுவனத்தைப் போலவே அச்சு அசலாக நகலெடுக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, அந்த நிறுவனத்துக்கு ‘சீல்’ வைத்தனா்.

இதுகுறித்து நவ்காா் அசோசியேட்ஸ் வழக்குரைஞா் நம்ரதா ஜெயின் கூறும்போது, ‘ஆய்வின்போது வா்த்தக முத்திரை மற்றும் காப்புரிமைச் சட்டங்களை மீறி தயாரிக்கப்பட்ட பெருமளவிலான போலி பசை பொருள்கள் கண்டறியப்பட்டன’ என்றாா்.

மற்றொரு வழக்குரைஞரான விஜய் சோனி கூறும்போது, ‘இந்த நிறுவனம் கடந்த 4 ஆண்டுகளாக சட்டவிரோதமாக இந்தத் தொழிலைச் செய்து வந்துள்ளது. எங்கள் தரப்பில் 6 மாதங்களுக்கு முன்பு நீதிமன்றத்தை அணுகிய நிலையில், தற்போது நீதிமன்ற உத்தரவின்படி பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, நிறுவனத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →