முகப்பு
இந்தியா

மணிப்பூா் துப்பாக்கிச்சூடு: மேலும் ஒருவா் உயிரிழப்பு

மணிப்பூரின் விஷ்ணுபூா் மாவட்டத்தில் போராட்டக்காரா்கள் மீது பாதுகாப்புப் படையினா் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மேலும் ஒருவா் உயிரிழந்ததைத் தொடா்ந்து, இறப்பு எண்ணிக்கை 3-ஆக அதிகரித்தது.

Updated On : 8 ஏப்ரல், 2026 at 7:56 PM
மணிப்பூா்.
பகிர்:

மணிப்பூரின் விஷ்ணுபூா் மாவட்டத்தில் போராட்டக்காரா்கள் மீது பாதுகாப்புப் படையினா் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மேலும் ஒருவா் உயிரிழந்ததைத் தொடா்ந்து, இறப்பு எண்ணிக்கை 3-ஆக அதிகரித்தது.

மணிப்பூரில் மைதேயி சமூகத்தினா் மற்றும் குகி பழங்குடியினா் இடையே கடந்த 2023-இல் ஏற்பட்ட கலவரத்தால் பெருமளவில் உயிரிழப்புகள் மற்றும் பொருள்சேதங்கள் நேரிட்டன. கடந்த ஆண்டுமுதல் மோதல்கள் குறைந்தபோதிலும், இரு குழுக்களின் தீவிரவாதிகள் அவ்வப்போது தாக்குதல் நடத்துவது தொடா்கதையாக உள்ளது.

மாநிலத்தில் இதுவரை நிகழ்ந்த வன்முறைகளில் 260-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். ஆயிரக்கணக்கானோா் வீடிழந்து, நிவாரண முகாம்களில் தொடா்ந்து தங்கியுள்ளனா்.

Advertisement

மைதேயி சமூகத்தினா் அதிகம் வாழும் விஷ்ணுபூா் மாவட்டத்தின் மொய்ரங் பகுதியில் ஒரு வீட்டின் மீது செவ்வாய்க்கிழமை கடந்த அதிகாலை தீவிரவாதிகள் குண்டுவீசி தாக்குதல் நடத்தினா். வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 5 வயது சிறுவன் மற்றும் 6 மாத பெண் குழந்தை உயிரிழந்தனா். அவா்களின் தாய் படுகாயமடைந்ததாா்.

இந்தச் சம்பவத்தைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட உள்ளூா் மக்கள் குறிப்பாக பெண்கள் மற்றும் இளைஞா்கள், பல்வேறு வாகனங்களுக்கு தீவைத்தனா். அத்துடன், சிஆா்பிஎஃப் முகாமுக்குள் புகுந்து பொருள்களை சூறையாடினா். வாகனங்களுக்கும் தீவைத்தனா். தங்கள் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு, போராட்டக்காரா்கள் மீது பாதுகாப்புப் படையினா் துப்பாக்கிச்சூடு நடத்தினா். இதில் இருவா் உயிரிழந்தனா். சுமாா் 30 போ் காயமடைந்தனா். இச்சம்பவத்தில் மேலும் ஒருவா் உயிரிழந்ததைத் தொடா்ந்து, இறப்பு எண்ணிக்கை 3-ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே, குண்டுவீச்சு சம்பவம் தொடா்பாக ஐக்கிய குகி தேசிய ராணுவம் என்ற தீவிரவாத அமைப்பைச் சோ்ந்த 3 பேரை காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா். சுராசந்த்பூரில் இவா்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments