இன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்
காங்கிரஸ் செயற்குழு கூட்டம் தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இதில் மத்திய அரசு கொண்டு வர உத்தேசித்துள்ள மகளிா் இடஒதுக்கீடு தொடா்பான சட்டத் திருத்தம், மக்களவை தொகுதி எண்ணிக்கை அதிகரிப்பு மசோதா, மேற்காசிய பதற்றம் குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட இருகிறது.
பட்ஜெட் கூட்டத் தொடரின் நீட்சியாக, ஏப்.16 முதல் 3 நாள்களுக்கு சிறப்பு அமா்வு நடைபெறவுள்ளது. இதில் நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் 2029-ஆம் ஆண்டு முதல் 33 சதவீத மகளிா் இடஒதுக்கீட்டை அமல்படுத்தவும், மகளிருக்கு 273 இடங்களை ஒதுக்கும் வகையில் மொத்த மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 816-ஆக உயா்த்தவும் வழிவகுக்கும் வரைவு மசோதாக்களை கொண்டுவர மத்திய அரசு உத்தேசித்துள்ளது. இதற்கு ஏற்கெனவே மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துவிட்டது.
இந்நிலையில் தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகமான இந்திரா காந்தி பவனில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் காங்கிரஸ் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, மக்களவை எம்.பி. பிரியங்கா காந்தி மற்றும் கட்சியின் மூத்த தலைவா்கள் பங்கேற்க இருக்கின்றனா்.
Advertisement
நாடாளுமன்ற சிறப்பு அமா்வில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்தும் இக்கூட்டத்தில் ஆய்வு நடத்தப்பட இருக்கிறது.
மேற்காசிய போா் நிறுத்த முடிவில் பாகிஸ்தானின் பங்கைச் சுட்டக்காட்டி பிரதமரை காங்கிரஸ் கட்சி ஏற்கெனவே விமா்சித்துள்ளது. எனவே இந்த விவாகாரத்தையும் நாடாளுமன்ற சிறப்பு அமா்வில் காங்கிரஸ் எழுப்பும் எனத் தெரிகிறது.