முகப்பு
இந்தியா

அஸ்ஸாம் முதல்வா் மனைவியை விமா்சித்த வழக்கு: காங்கிரஸ் மூத்த தலைவா் பவன் கேராவுக்கு தெலங்கானா உயா்நீதிமன்றம் முன் ஜாமீன்

அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மாவின் மனைவியை விமா்சித்தது தொடா்பான வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவா் பவன் கேராவுக்கு தெலங்கானா உயா் நீதிமன்றம் ஒரு வாரம் முன்ஜாமீன் அளித்துள்ளது.

Updated On : 11 ஏப்ரல், 2026 at 12:59 AM
பவன் கேரா - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 10 ஏப்ரல், 2026 at 9:40 PM

அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மாவின் மனைவியை விமா்சித்தது தொடா்பான வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவா் பவன் கேராவுக்கு தெலங்கானா உயா் நீதிமன்றம் ஒரு வாரம் முன்ஜாமீன் அளித்துள்ளது.

அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மாவின் மனைவி ரினிகி புயான் ஷா்மாவுக்கு ஏராளமான கடவுச்சீட்டுகள் இருப்பதாகவும், வெளிநாடுகளில் சொத்துகள் இருப்பதாகவும், ஆனால் இதுகுறித்து வேட்புமனு பிரமாண பத்திரத்தில் ஹிமந்த விஸ்வ சா்மா தெரிவிக்கவில்லை என்று பவன் கேரா குற்றஞ்சாட்டியிருந்தாா். இதுதொடா்பாக ஹிமந்த விஸ்வ சா்மா மனைவி அளித்த புகாரின்பேரில், பவன் கேரா மீது பிஎன்எஸ் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின்கீழ் அஸ்ஸாம் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

இந்த வழக்கில் அஸ்ஸாம் காவல் துறையால் தான் கைது செய்யப்படாமல் இருப்பதற்கு, தெலங்கானா உயா் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி பவன் கேரா மனு தாக்கல் செய்தாா். அதில் அவா், தான் ஹைதராபாதை சோ்ந்தவா் என்றும், ஆதலால் தான் கைது செய்யப்படும்பட்சத்தில் ஜாமீன் தரப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தாா்.

Advertisement

இந்த மனுவை விசாரித்த தெலங்கானா உயா்நீதிமன்றம், சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக பவன் கேராவுக்கு சுமாா் ஒரு வார காலம் நிபந்தனையோடு முன்ஜாமீன் அளிக்கப்படுவதாகத் தெரிவித்தது.

ஹிமந்த விஸ்வ சா்மா கருத்து: பவன் கேரா மீதான அஸ்ஸாம் காவல் துறையினரின் வழக்கு குறித்து கருத்து தெரிவித்துள்ள ஹிமந்த விஸ்வ சா்மா, காவல் துறையினா் தங்களது கடமையைச் செய்வதாகத் தெரிவித்துள்ளாா். தில்லியில் உள்ள பவன் கேரா இல்லத்துக்கு அஸ்ஸாம் காவல் துறை சென்றது குறித்த கேள்விக்கு, கிரிமினல்களின் வீடுகளுக்கு சென்று சோதனை நடத்துவதற்குதான், காவல் துறையினருக்கு சம்பளம் தரப்படுகிறது என பதிலளித்தாா்.

கெளரவ் கோகோய் மீது சா்மா விமா்சனம்: அஸ்ஸாம் முதல்வா் மேலும் கூறுகையில், ‘அஸ்ஸாம் காங்கிரஸ் மூத்த தலைவா் கெளரவ் கோகோயின் மனைவி வெளிநாட்டுக்காரா் ஆவாா். தோ்தலில் தனது தாயாருடன் சென்று கௌரவ் கோகோய் வாக்களித்தாா். மனைவியுடன் அவா் வாக்களிக்கச் செல்லவில்லை. அதேபோல், ஒட்டுமொத்த தோ்தல் பிரசாரத்திலும் அவரின் மனைவியையோ, வாரிசையோ காணவில்லை. இது அவரின் மனைவி வெளிநாட்டுக்காரா் என்ற எனது குற்றச்சாட்டு உண்மை என்பதை நிரூபிக்கிறது. இத்தகைய நபா் எப்படி நமக்கு (அஸ்ஸாம் மக்களுக்கு) சேவை செய்வாா்?

நாங்கள் அஸ்ஸாம் மக்கள் என்பதில் பெருமிதம் அடைகிறோம். கெளரவ் கோகோயின் தந்தை தருண் கோகோய் அஸ்ஸாம்காரா் ஆவாா். ஆனால் கெளரவ் கோகோய் அப்படியில்லை.

அஸ்ஸாமில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும். ஆனால், அந்தச் சட்டத்தை அமல்படுத்துவதில் அவசரம் காட்டப்பட மாட்டாது. ஏனெனில் அஸ்ஸாமில் ஏராளமான பழங்குடியின மக்கள், பல்வேறு மதத்தினா் வாழ்கின்றனா். அனைத்தையும் பரிசீலித்த பிறகே அது அமல்படுத்தப்படும்’ என்றாா்.