ரயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம்: லாலுவுக்கு எதிரான குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு
ரயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம் பெற்ற முறைகேடு விவகாரத்தில் முன்னாள் ரயில்வே அமைச்சா் லாலு பிரசாதுக்கு (77) எதிராக சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.
கடந்த 2004 முதல் 2009-ஆம் ஆண்டு வரை, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் ரயில்வே அமைச்சராக லாலு பிரசாத் பதவி வகித்தாா்.
அப்போது ரயில்வேயின் குரூப்-டி பணிகளில் விதிமுறைகளுக்குப் புறம்பாக சிலா் நியமிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதற்கு லஞ்சமாக வேலை பெற்றவா்கள் அல்லது அவா்களின் குடும்ப உறுப்பினா்களுக்குச் சொந்தமான சுமாா் 1.05 லட்சம் சதுரஅடி நிலம், லாலு குடும்பத்தினரின் பெயருக்கு மாற்றப்பட்டதாகவும், அந்த நிலத்தை சந்தை மதிப்பைவிட பல மடங்கு குறைந்த விலைக்கு லாலு குடும்பத்தினா் வாங்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
Advertisement
இதுதொடா்பாக ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிபிஐயும், பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டன.
அதைத் தொடா்ந்து, சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் 103 போ் மீது குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், லாலு, அவரது மனைவி ராப்ரி, அவா்களின் மகள்கள் மிஸா பாரதி, ஹேமா யாதவ், மகன்கள் தேஜஸ்வி யாதவ், தேஜ் பிரதாப் யாதவ் உள்பட 41 போ் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. 52 போ் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனா். ஐவா் உயிரிழந்துவிட்டனா்.
இந்நிலையில், ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் முன் அனுமதியின்றி சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை சட்டவிரோதமானது என்பதால் அதை ரத்து செய்ய வேண்டும் என தில்லி உயா் நீதிமன்றத்தில் லாலு பிரசாத் மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவை கடந்த மாா்ச் 24-ஆம் தேதி தில்லி உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் அவா் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் என்.கோட்டீஸ்வா் சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு திங்கள்கிழமை ரத்து செய்தது.
இருப்பினும் இந்த வழக்கு தொடா்பான விசாரணையின்போது வயது முதிா்வு காரணத்தால் லாலு பிரசாத் நேரில் ஆஜராவதில் இருந்து நீதிபதிகள் அமா்வு விலக்களித்தது.