17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!
உத்தரப் பிரதேசத்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குள்ளான 17 வயது சிறுமி, தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து...
உத்தரப் பிரதேசத்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குள்ளான 17 வயது சிறுமி, தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் வன்கொடுமை குறித்து அளிக்கப்பட்ட புகாரில் காவல் துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக சிறுமியின் பெற்றோர் தெரிவித்தனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் சித்திரகூட் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி மீது அதே பகுதியைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள், ஹோலி பண்டிகையின்போது வண்ணப் பொடிகளை கட்டாயப்படுத்தி தூவியதாக சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
Advertisement
எனினும் அவர்கள் மீது சட்டரீதியாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என பெற்றோர் கேட்டுக்கொண்டதாக காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது.
பின்னர் சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட பிறகே, ஹோலி பண்டிகையின்போது நடந்தது, கூட்டுப் பாலியல் வன்கொடுமை எனத் தெரியவந்து, சிறுமியின் பெற்றோர் மீண்டும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இது தொடர்பாக சித்ரகூட் காவல் கண்காணிப்பாளர் அருண் குமார் சிங் கூறியதாவது:
''சிறுமி தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சிறுமியின் தாயார் வாய்வழியாகவே முதலில் புகார் அளித்தார். எனினும் அவர்கள் மீது எந்தவொரு சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார். தற்போது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதால் புதிதாக பெற்றோரிடம் புகார் பெறப்பட்டுள்ளது.
பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவர்கள் 18 வயது பூர்த்தியடையாத சிறுவர்கள் எனத் தெரியவந்துள்ளது. அவர்கள் மீது பாலியல் வன்கொடுமை, தற்கொலைக்குத் தூண்டுதல் என இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
காவல் துறையினர் மெத்தனமாக செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்கும் வகையில் குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்'' எனக் குறிப்பிட்டார்.
சமஜவாதி கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. அணில் பிரதான், பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டிற்கு நேரடியாகச் சென்று ஆறுதல் கூறினார். சட்டரீதியாக அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்தார்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].