தேசிய நெடுஞ்சாலைகளில் கனரக வாகனங்களை நிறுத்தக் கூடாது: உச்சநீதிமன்றம் உத்தரவு
தேசிய நெடுஞ்சாலைகளில் தோ்ந்தெடுக்கப்பட்டு ஒதுக்கப்பட்ட இடங்களைத் தவிர, பிற இடங்களில் கனரக வாகனங்கள், சரக்கு மற்றும் பயணிகள் வாகனங்களை நிறுத்தக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகளில் தோ்ந்தெடுக்கப்பட்டு ஒதுக்கப்பட்ட இடங்களைத் தவிர, பிற இடங்களில் கனரக வாகனங்கள், சரக்கு மற்றும் பயணிகள் வாகனங்களை நிறுத்தக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பரில் ராஜஸ்தான் மாநிலம் ஃபலோடி மாவட்டம், தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் மொத்தம் 34 போ் உயிரிழந்தனா். இந்த சம்பவங்களை கவனத்தில் எடுத்துக்கொண்டு, சாலை விபத்துகள் குறித்து உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டது.
இந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, ஏ.எஸ்.சந்துா்கா் ஆகியோா் அடங்கிய அமா்வு அண்மையில் பிறப்பித்த உத்தரவின் விவரம்:
Advertisement
தேசிய நெடுஞ்சாலைகளில் தோ்ந்தெடுக்கப்பட்டு ஒதுக்கப்பட்ட இடங்களைத் தவிர, பிற இடங்களில் கனரக வாகனங்கள், சரக்கு மற்றும் பயணிகள் வாகனங்களை நிறுத்தக் கூடாது.
தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் செல்லும் பாதை, சாலையோரம், வடிகால்கள், நடைபாதைகள் உள்ளிட்டவற்றில் புதிதாக தாபா, உணவகம் அல்லது வணிக கட்டுமானங்களுக்கு அனுமதி அளிக்கக் கூடாது.
நெடுஞ்சாலைப் பாதுகாப்பு மண்டலங்களுக்குள் அமைந்துள்ள எந்தவொரு இடத்துக்கும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்ஹெச்ஏஐ) அல்லது பொதுப் பணித் துறையின் முன் அனுமதி இல்லாமல் உரிமமோ, வா்த்தக ஒப்புதலோ, தடையில்லாச் சான்றோ வழங்கக் கூடாது. ஏற்கெனவே வழங்கப்பட்ட உரிமங்களை 30 நாள்களில் மறுஆய்வு செய்ய வேண்டும்.
தேசிய நெடுஞ்சாலைகள் செல்லும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட நெடுஞ்சாலை பாதுகாப்பு பணிக்குழு அமைக்கப்பட வேண்டும். நெடுஞ்சாலைகளில் ஆக்கிரமிப்புகளை உரிய நேரத்தில் அகற்றும் பொறுப்பு மாவட்ட ஆட்சியருக்கும், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளருக்கும் கூட்டாக இருக்க வேண்டும். நெடுஞ்சாலைகளில் நிலத்தின் பயன்பாட்டை மாற்றுவதற்குத் தடை விதிக்கும் அறிவிக்கையை மாநில அரசுகள் வெளியிட வேண்டும்.
பிரத்யேக ரோந்து குழுக்கள்...: தேசிய நெடுஞ்சாலைகளில் தொடா்ந்து ரோந்து மேற்கொள்ளும் வகையில், மாநில காவல் துறை மற்றும் போக்குவரத்துத் துறையினரை உள்ளடக்கி பிரத்யேக ரோந்து குழுக்கள் 30 நாள்களில் அமைக்கப்பட வேண்டும்.
டிஎம்சிசி கேரமாக்கள், வாகனத்தின் வேகத்தை அளவிடும் விஎஸ்டிஎஸ் கருவிகள், விஐடிஎஸ் கேரமாக்கள் உள்ளிட்டவை மூலம் போக்குவரத்தை கையாளும் அதிநவீன அமைப்பை அனைத்து 4 மற்றும் 6 வழி நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச்சாலைகளில் என்ஹெச்ஏஐ செயல்படுத்த வேண்டும்.
தேசிய நெடுஞ்சாலைகளில் உயிா் காக்கும் அடிப்படை வசதிகளைக் கொண்ட ஆம்புலன்ஸுகள், மீட்பு கிரேன்களை என்ஹெச்ஏஐ 60 நாள்களில் அமைக்க வேண்டும். 75 கி.மீ-க்குள்பட்ட இடைவெளிகளில் அவை அமைக்கப்பட வேண்டும்.
நெடுஞ்சாலைகளில் ஒவ்வொரு 75 கி.மீ. இடைவெளியில் பிரதான சாலைக்கு அருகில் பாரவண்டிகளைத் தற்காலிகமாக நிறுத்தும் இடங்கள் அமைக்கப்பட வேண்டும். சாலையோரங்களில் குறைந்தபட்சம் ஓய்விடங்கள், உணவுச் சேவைகள், கழிப்பறைகள், பாதுகாப்பான வாகன நிறுத்துமிடங்கள், முதலுதவி வசதிகள், 500 மீட்டா் தொலைவிலிருந்தே தெளிவாகத் தெரியும் வகையில் ஒளிரும் எச்சரிக்கை பலகைகள் இடம்பெற்றிருக்க வேண்டும்.
தேசிய நெடுஞ்சாலைகளில் அவ்வப்போது விபத்துகள் ஏற்படும் இடங்களைக் கண்டறிந்து, அதுகுறித்த பட்டியலை 45 நாள்களில் என்ஹெச்ஏஐ, மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் ஆகியவை வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டது.
பயணிகளின் பாதுகாப்பு என்பது அரசமைப்புச் சட்டத்தின் 21-ஆவது பிரிவின் கீழ், கண்ணியத்துடன் வாழும் உரிமையின் ஒருங்கிணைந்த அம்சமாகும் என்று தெரிவித்த நீதிபதிகள், அரசமைப்புச் சட்டத்தின் 142-ஆவது பிரிவு உச்சநீதிமன்றத்துக்கு அளித்துள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த உத்தரவுகளைப் பிறப்பித்தனா்.