சூரத் - மேற்கு வங்கம் இடையே இலவச ரயில் பயணம்? பாஜக மீது திரிணமூல் புகார்!
புலம்பெயர் தொழிலாளர்களுக்காக குஜராத் - மேற்கு வங்கம் இடையே இலவச பயணத்துடன் சிறப்பு ரயில் இயக்கப்படுவது குறித்து...
தேர்தலையொட்டி குஜராத் மாநிலம் சூரத்திலிருந்து மேற்கு வங்கத்திற்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் ஆணையத்தில் மமதா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் கட்சி இன்று (ஏப். 22) புகார் அளித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு நாளை (ஏப். 23) நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலாகியுள்ளபோது சிறப்பு ரயிலுடன் அதில் இலவச பயணத்தையும் பாஜக அறிவித்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. டெரிக் ஓபிரையன் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
Advertisement
Advertisement
''பாஜகவும் அதன் குஜராத் பிரிவும் புலம் பெயர்த் தொழிலாளர்கள் திரும்புவதற்காக சிறப்பு ரயில் சேவையை அறிவித்துள்ளது. அவர்களின் இந்த ஏற்பாடுகள் கட்டணமில்லா பயணத்துடன் உணவு உள்ளிட்டவையும் இலவசமாக வழங்கப்படுகிறது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளபோது அதனை மீறும் நடவடிக்கையாக இது உள்ளது'' எனக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மேற்கு வங்கத்திற்கு வாக்காளர்களை அழைத்துச் செல்வதற்காக சூரத்திலிருந்து ரயில் புறப்படும் விடியோவையும் டெரிக் ஓபிரையன் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த ரயிலில் பாஜக உறுப்பினர்கள் உடன் இருந்து, திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வாக்களிக்குமாறு வாக்காளர்களிடம் கூறுவதாகவும் ஓபிரையன் குற்றம் சாட்டியுள்ளார்.
ரயில்வே துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் நிலையில், தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் அரசியல் லாபத்திற்காக அதனைப் பயன்படுத்தக் கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளார்.
அரசின் கட்டுப்பாட்டில் உள்ள வளங்களை அரசியல் லாபத்திற்காக தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்றும், இத்தகைய நடவடிக்கை பாஜகவுக்கு சாதகமான சூழலை உருவாக்கி நேர்மையற்ற வாக்குப்பதிவுக்கு வழிவகுக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பாஜக தனிப்பட்ட முறையில் இதற்கான செலவை ஏற்றிருந்தாலும் கூட, தேர்தல் நேரத்தில் பிரசாரங்கள் முடிந்து கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்த பிறகு, வாக்காளர்களை இலவசமாக ரயில் மூலம் அழைத்து வருவது தேர்தல் விதிமுறைகளை மீறும் செயல் எனவும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தேர்தல் ஆணையம் முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
TMC alleges BJP misused Railways for voter transport to West Bengal ahead of first phase elections
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.