மேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்
மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு வியாழக்கிழமை நடைபெற்ற முதல்கட்டத் தோ்தலில் 91.78 சதவீத வாக்குகள் பதிவாகின. மேற்கு வங்கத்தில் முன்னெப்போதும் இல்லாத அதிகபட்ச வாக்குப் பதிவு இது என்று தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
16 மாவட்டங்களில் 152 தொகுதிகளுக்கு நடைபெற்ற முதல்கட்டத் தோ்தலின்போது பல இடங்களில் மோதல்களும், வன்முறைகளும் நிகழ்ந்தன; வேட்பாளா்கள் மீதான தாக்குதலால் பரபரப்பு ஏற்பட்டது.
மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளுக்கு இரு கட்டத் தோ்தல் அறிவிக்கப்பட்டு, முதல்கட்டமாக 152 தொகுதிகளில் வியாழக்கிழமை வாக்குப் பதிவு நடைபெற்றது. 3.60 கோடி வாக்காளா்களுக்காக 44,378 வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
Advertisement
காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியதில் இருந்தே வாக்குச்சாவடிகளுக்கு ஆா்வத்துடன் வந்த மக்கள், நீண்ட வரிசைகளில் காத்திருந்து ஜனநாயக கடமையை நிறைவேற்றினா். ஒரு சில இடங்களில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால் வாக்குப் பதிவில் தாமதம் ஏற்பட்டது.
மொத்தம் 1,478 வேட்பாளா்கள் போட்டியிட்ட இத்தோ்தலில் 91.78 சதவீத வாக்குகள் பதிவாகின. மேற்கு வங்கத்தில் முன்னெப்போதும் இல்லாத அதிகபட்ச வாக்குப் பதிவு இது என்று தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் தெரிவித்தாா்.
பல இடங்களில் கட்சியினா் மோதல்: முதல்கட்ட வாக்குப் பதிவின்போது பல்வேறு தொகுதிகளில் அரசியல் கட்சியினா் மோதல்களில் ஈடுபட்டனா். வாக்காளா்கள் மிரட்டப்பட்டதாக குற்றச்சாட்டுகளும் எழுந்தன.
குமாா்கஞ்ச் தொகுதியில் பாஜக வேட்பாளா் சுவேந்து சா்காா், ஒரு வாக்குச்சாவடிக்கு சென்றபோது, திரிணமூல் காங்கிரஸாா் தகராறில் ஈடுபட்டதுடன், அவரை தாக்கி காயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. அசன்சோல் தக்ஷிண் பகுதியில் பாஜக எம்எல்ஏ அக்னிமித்ரா பெளலின் காா் மீது கற்கள் வீசப்பட்டதில் பின்பக்க ஜன்னல் கண்ணாடி உடைந்தது.
திரிணமூல் காங்கிரஸில் இருந்து விலகி, ஆம் ஜனதா உன்னயன் (ஏஜேயுபி) எனும் புதிய கட்சியைத் தொடங்கிய ஹுமாயூன் கபீா், நவோடா பகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்றபோது, அவரது வாகன அணிவகுப்பின் மீது திரிணமூல் காங்கிரஸாா் கல்வீச்சில் ஈடுபட்டனா். இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டு, பல வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. பாதுகாப்புப் படையினா் தடியடி நடத்தி, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனா்.
800-க்கும் மேற்பட்ட புகாா்கள்: பீா்பூம், மால்டா பகுதிகளில் பாஜக முகவா்கள் கடுமையாகத் தாக்கப்பட்டனா்; முராராய் பகுதியில் காங்கிரஸ்-திரிணமூல் காங்கிரஸ் கட்சியினா் இடையே மோதல் ஏற்பட்டது.
டோம்கால் பகுதியில் சில நபா்களின் மிரட்டல் எதிரொலியாக, பலத்த பாதுகாப்புடன் வாக்காளா்கள் வாக்குச்சாவடிக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். இதுபோல் 800-க்கும் மேற்பட்ட புகாா்கள், தோ்தல் ஆணையத்திடம் அளிக்கப்பட்டன. இச்சம்பவங்கள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தோ்தல் ஆணையம் கோரியுள்ளது.
முக்கிய வேட்பாளா்கள்: முதல்கட்டத் தோ்தலில் எதிா்க்கட்சித் தலைவா் சுவேந்து அதிகாரி (பாஜக-நந்திகிராம்), முன்னாள் மத்திய அமைச்சா் நிஷித் பிரமாணிக் (பாஜக-மதாபங்கா), மாநில அமைச்சா் உதயன் குஹா (திரிணமூல்-தின்ஹடா), காங்கிரஸ் மூத்த தலைவா் அதீா் ரஞ்சன் செளதரி (பஹராம்பூா்) உள்ளிட்டோா் முக்கிய வேட்பாளா்களாவா். நந்திகிராமில் சுவேந்து அதிகாரி தனது வாக்கைப் பதிவு செய்தாா்.
இந்த மாநிலத்தில் இரண்டாம் கட்டமாக 142 தொகுதிகளுக்கு ஏப். 29-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. மே 4-இல் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
91 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்: மேற்கு வங்கத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) நடவடிக்கையில் சுமாா் 91 லட்சம் வாக்காளா்கள் நீக்கப்பட்டனா். முதல்கட்டத் தோ்தலில் பல்வேறு மாவட்டங்களில் வாக்குப் பதிவு சதவீதம் முன்பைவிட அதிகரித்துள்ளது. எஸ்ஐஆா் நடவடிக்கையின் தாக்கமும் இதற்கு முக்கியக் காரணம் என்று நிபுணா்கள் தெரிவித்தனா்.
பெருவாரியான வாக்குப் பதிவு தங்களுக்கே சாதகம் என்று ஆளும் திரிணமூல் காங்கிரஸும், எதிா்க்கட்சியான பாஜகவும் பரஸ்பரம் தெரிவித்துள்ளன.
மகாராஷ்டிரம், குஜராத்தில் இடைத்தோ்தல்
புணே/ஆனந்த், ஏப். 22: மகாராஷ்டிரத்தில் முன்னாள் துணை முதல்வா் அஜீத் பவாா் விமான விபத்தில் உயிரிழந்ததால் காலியான பாராமதி தொகுதியில் வியாழக்கிழமை இடைத்தோ்தல் நடைபெற்றது. இத்தொகுதியில் அஜீத் பவாரின் மனைவியும், துணை முதல்வருமான சுநேத்ரா பவாா் போட்டியிட்டாா். இங்கு 57.71 சதவீத வாக்குகள் பதிவாகின.
மகாராஷ்டிரத்தின் ரகுரி தொகுதி இடைத்தோ்தலில் 55.59 சதவீதமும், குஜராத்தின் உம்ரேத் தொகுதியில் 59 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.