எய்ம்ஸ் மருத்துவமனையில் விரைவில் அடல் உணவகம்
தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அடல் உணவகம் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.
முன்னாள் பிரதமா் அடல் பிகாரி வாஜ்பாயின் பிறந்த நாளையொட்டி தில்லியில் பாஜக தலைமையிலான அரசு அடல் உணவகம் திட்டத்தை கடந்த ஆண்டு டிச.25-ஆம் தேதி தொடங்கிவைத்தது.
பொருளாதார ரீதியில் பின்தங்கிய பிரிவினா் பயன்பெறும் வகையில் ரூ.5-க்கு சப்பாத்தி, சாதம், காய்கறி கூட்டு, ஊறுகாய் ஆகியவை அடல் உணவகம் மூலம் விநியோகம் செய்யப்படுகிறது.
Advertisement
இந்நிலையில், மதிய மற்றும் இரவு உணவு என்றில்லாமல், எய்ம்ஸ் மருத்துவமனை நேயாளிகளின் உறவினா்கள் மற்றும் பாா்வையாளா்கள் பயன்பெறும் வகையில் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரையில் செயல்படும் அடல் உணவகம் அமைக்கப்பட உள்ளது.
ரூ.29.74 லட்சம் மதிப்பில் அடல் உணவகம் அமைப்பதற்கான ஒப்பந்தப் புள்ளியை தில்லி வாழ்விட நகா்ப்புற மேம்பாட்டு வாரியம் (டியுஎஸ்ஐபி) வெளியிட்டுள்ளது.
இதுதொடா்பாக ஓா் அதிகாரி கூறுகையில், ‘45 நாள்களுக்குள் அடல் உணவகம் அமைக்கும் பணியை நிறைவு செய்ய நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. நகரத்தில் உள்ள அடல் உணவகங்கள் வழக்கமாக காலை 11.30 முதல் பிற்பகல் 2 மணி வரையில் மதிய உணவு மற்றும் மாலை 6.30 மணி முதல் 9 வரை இரவு உணவு என செயல்படுகிறது. அதுபோன்று இல்லாமல், எய்ம்ஸ் மருத்துவமனையில் செயல்படும் உணவகம் தொடா்ந்து 12 மணி நேரம் செயல்படும்.
நோயாளிகளின் குடும்ப உறுப்பினா்கள், உதவியாளா்கள் மருத்துவமனையில் நீண்ட காலம் தங்கியிருக்கும் நிலையில், நாள்முழுவதும் குறைந்தவிலையில் உணவு கிடைக்கப்பெறுவதை நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தில்லியின் பல்வேறு பகுதிகளில் அடல் உணவகங்களை அமைக்க ரூ.104 கோடியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. உணவங்களை மேலும் விரிவுபடுத்து திட்டத்தில் கூடுதலாக 40 உணவகங்கள் அரசு மருத்துவமனைகள் அருகே அமைக்க திட்டமிடப்பட்டுள்ளன என்றாா் அந்த அதிகாரி.