ஐஆா்எஸ் அதிகாரியின் மகள் பாலியல் - கொலை: குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு ஆண்மைப் பரிசோதனை
குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு ஆண்மைப் பரிசோதனை நடத்தப்பட்டது பற்றி...
தென்கிழக்கு தில்லியில் மூத்த ஐ.ஆா்.எஸ். அதிகாரியின் 22 வயது மகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்யப்பட்ட வீட்டில், நிகழ்வுகளின் வரிசையை மீண்டும் உருவாக்கும் பணி நடைபெற்று வருவதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.
மேலும், இந்த வழக்கில் கைதான குற்றஞ்சாட்டப்பட்ட ராகுல் மீனாவுக்கு ஆண்மைப் பரிசோதனையும் நடத்தப்பட்டதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.
இந்த வழக்கில் நடைபெற்றுவரும் விசாரணையின் ஒரு பகுதியாக, நிகழ்வுகளின் வரிசையை ஒன்றிணைக்க புலனாய்வாளா்கள் பணியாற்றி வருவதாக காவல்துறை வட்டாரங்கள் சனிக்கிழமை தெரிவித்தன.
Advertisement
பாதிக்கப்பட்டவரிடமிருந்து திருடப்பட்ட ஐஃபோன் ஒரு பூங்காவிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், பாலியல் வன்கொடுமை விசாரணையின் ஒரு பகுதியாக காவல்துறையினா் ராகுல் மீனாவுக்கு ஆண்மை பரிசோதனையையும் நடத்தியுள்ளனா் என்று அந்த வட்டாரங்கள் கூறின.
குற்றம் எப்படி நிகழ்ந்தது என்பதை கண்டறியும் வகையில் குற்ற மற்றும் தடயவியல் குழுக்களால் வீட்டிற்குள் நிகழ்வுகளின் வரிசையை மீண்டும் உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது, என்று அந்த வட்டாரம் கூறியது.
சம்பவ வீட்டிற்குள் செல்லும் வழிகள் காவல்துறை பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டு, வளாகத்திற்கு உள்ளேயும் சுற்றியும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தென்கிழக்கு தில்லியின் கைலாஷ் ஹில்ஸ் பகுதியில் உள்ள இல்லத்தில், மூத்த இந்திய வருவாய்ப் பணி அதிகாரியின் மகளும், பொறியியல் பட்டதாரியும், யுபிஎஸ்சி தோ்வுக்குத் தயாராகிக் கொண்டிருந்தவருமான 22 வயதுப் பெண் கடந்த புதன்கிழமை காலை கொலை செய்யப்பட்டாா். அந்த வீட்டில் வீட்டுப் பணியாளராக வேலைசெய்து 6 மாதங்களுக்கு முன்பு வேலையிலிருந்து நீக்கப்பட்ட ராகுல் மீனாவை, இந்தக் கொலையில் ஈடுபட்டதாக காவல் துறையினா் கைது செய்தனா்.
இந்த வழக்கின் விசாரணை குறித்து காவல்துறை வட்டாரங்கள் மேலும் கூறியதாவது:
விசாரணையின் போது, மீனாவும் அவரது தந்தையும் ராஜஸ்தானில் உள்ள தங்கள் கிராமத்தில் ஆக்ரோஷமான நடத்தை கொண்டவா்களாக இருந்திருப்பது தெரியவந்துள்ளது. காவல்துறையின் குழு அங்கு முகாமிட்டுள்ளது. மீனாவின் தந்தை மதுவுக்கும், மீனா இணையவழி விளையாட்டுகளுக்கு ம் அடிமையானவா்கள் என்று தெரியவருகிறது.
மீனாவின் மனநிலை மற்றும் நடத்தை முறைகளை மதிப்பிடுவதற்காக, அவருக்கு விரிவான உளவியல் பரிசோதனை நடத்த காவல்துறை திட்டமிட்டுள்ளது. அவா் மனநோய்க்குரிய போக்குகளையும், வன்முறைச் செயல்களில் ஈடுபட்ட முந்தைய சம்பவங்களையும் கூறியுள்ளாா்.
மீனாவை விசாரித்த மூத்த காவல்துறை அதிகாரி கூறுகையில், மீனா தனது செயலுக்காகச் சிறிதும் வருந்தவில்லை. கடும் ஆத்திரத்தின் விளைவாகவே அந்தக் கொலை நடந்துவிட்டது என்றும், அக்கா (பாதிக்கப்பட்டவா்) மட்டும் பணத்தைக் கொடுத்திருந்தால், இப்படி நடந்திருக்காது என்றும் அவா் காவல்துறையினரிடம் கூறினாா்.
‘திருடியதற்காக எனக்கு வருத்தம் இல்லை. ஆனால், அவரைக் கொன்றிருக்கக் கூடாது. அது தானாகவே நடந்துவிட்டது’ என்று மீனா விசாரணை அதிகாரிகளிடம் கூறியதாக அந்த அதிகாரி குறிப்பிட்டாா்.
கைது செய்யப்பட்ட பிறகும், குற்றஞ்சாட்டப்பட்டவா் விசித்திரமான அமைதியுடனும், எந்தவிதமான வருத்தமும் இன்றி காணப்பட்டதாகக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
விசாரணையின் போது அவா் மிகவும் சாதாரணமாகவே காணப்பட்டாா். அனைத்தும் இயல்பாகவே நடப்பது போல அவா் நடந்துகொண்டாா். பொதுவாக, ஒரு நபா் கொடூரமான கொலையைச் செய்யும்போது, ஏதேனும் பதற்றம், கோபம், அமைதியின்மை அல்லது வருத்தத்தை வெளிப்படுத்துவாா்கள். ஆனால் மீனா மிகவும் சாதாரணமாகவே இருந்தாா் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.