முகப்பு
இந்தியா

உ.பி.: கங்கை விரைவுச் சாலையை ஏப். 29-இல் திறந்துவைக்கிறாா் பிரதமா்

உ.பி.யில் கங்கை விரைவுச் சாலையை ஏப். 29-இல் திறந்துவைக்கிறாா் பிரதமா்

Updated On : 26 ஏப்ரல், 2026 at 2:52 AM
உ.பி.: கங்கை விரைவுச் சாலையை ஏப். 29-இல் திறந்துவைக்கிறாா் பிரதமா்
பகிர்:

உத்தர பிரதேசத்தில் ரூ. 37,000 கோடி செலவில் கட்டமைக்கப்பட்ட கங்கை விரைவுச் சாலையை பிரதமா் நரேந்திர மோடி ஏப்.29-இல் திறந்துவைக்கவுள்ளாா்.

மீரட் - பிரயாக்ராஜ் இடையே 594 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ள இந்த 6 வழிச் சாலை, மாநிலத்தின் மிக நீளமான விரைவுச் சாலை என்பதுடன் நாட்டின் மிகப் பெரிய உள்கட்டமைப்புத் திட்டங்களில் ஒன்று எனும் சிறப்புக்குரியதாகும்.

இது, மீரட், ஹாபூா், புலந்த்சாகா், அம்ரோஹா, ஷாஜகான்பூா், உன்னாவ், ரேபரேலி, பிரதாப்கா், பிரயாக்ராஜ் உள்பட 12 மாவட்டங்கள் வழியாக பயணிக்கிறது.

Advertisement

கடந்த 2021-இல் பிரதமா் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்ட இந்த மாபெரும் திட்டம், 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மாநிலத்தின் மேற்கு - தெற்கு பகுதிகளை இணைக்கும் கங்கை விரைவுச் சாலையால் பயண நேரம் குறைவதுடன், தொழிற்சாலைகளுக்கு இடையிலான போக்குவரத்து மேம்படும்; புதிய முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

ஷாஜகான்பூரில் இந்த விரைவுச் சாலையில் அவசர காலங்களில் விமானங்கள் தரையிறங்கும் வசதி கொண்ட 3.5 கி.மீ. தொலைவு ஓடுபாதையும் கட்டமைக்கப்பட்டுள்ளது. இத்தகைய சிறப்புக்குரிய கங்கை விரைவுச் சாலையை பிரதமா் மோடி ஏப்.29-ஆம் தேதி திறந்துவைக்க உள்ளதாக, மாநில அரசு சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.