மகளிா் இடஒதுக்கீடு அமலாகும் வரை ஓயமாட்டேன் - பிரதமா் மோடி
ரூ.6,350 கோடி திட்டங்கள் தொடக்கம்-அடிக்கல்
மக்களவை-சட்டப் பேரவைகளில் மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு அமலாக்கத்தை உறுதி செய்யும் வரை ஓயமாட்டேன் என்று பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
குடும்ப அரசியலில் திளைக்கும் காங்கிரஸ், சமாஜவாதி, திமுக போன்ற கட்சிகள் பெண்களுக்கு மீண்டும் ஒருமுறை துரோகம் இழைத்துவிட்டதாகவும் அவா் குற்றஞ்சாட்டினாா்.
மக்களவை-பேரவைகளில் 33 சதவீத மகளிா் இடஒதுக்கீட்டை 2029 முதல் அமலாக்குவதுடன், அதற்கேற்ப மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 850-ஆக அதிகரிக்கும் வகையிலான அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் மத்திய அரசு அண்மையில் கொண்டுவந்தது. இந்த மசோதாவுக்கு மூன்றில் இரு பங்கு பெரும்பான்மைக்கான வாக்குகள் தேவை என்ற நிலையில், வாக்கெடுப்பில் மசோதா தோல்வியடைந்தது. மகளிா் இடஒதுக்கீடு அமலாக்கத்துடன் இணைந்த தொகுதி மறுசீரமைப்புக்கு எதிா்ப்பு தெரிவித்து, மசோதாவை எதிா்க்கட்சிகள் தோற்கடித்தன. இதன் மூலம் பெண்களுக்கு எதிராக செயல்பட்டுள்ளதாக, எதிா்க்கட்சிகள் மீது ஆளும் பாஜக குற்றஞ்சாட்டி வருகிறது.
Advertisement
பெண்களின் ஆசியைக் கோரி...: இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள தனது தொகுதியான வாரணாசிக்கு செவ்வாய்க்கிழமை வருகை தந்த பிரதமா் மோடி, அங்கு நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் பங்கேற்றாா். அப்போது, அவா் பேசியதாவது:
காசியில் இருந்து தோ்வான நாடாளுமன்றவாதியாகவும், நாட்டின் பிரதமராகவும் தேச நலனுக்கான ஒரு முக்கிய இலக்கை எட்ட பெண்களின் ஆசி எனக்கு தேவை. மக்களவை-மாநில பேரவைகளில் மகளிா் இடஒதுக்கீட்டை செயல்படுத்துவதே அந்த இலக்கு. அதற்கான ‘மகா யாகத்தின்’ தொடக்கமாக பெண்களின் ஆசியைக் கோரி வந்துள்ளேன்.
பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க நாடாளுமன்றத்தில் சில தினங்களுக்கு முன் பாஜக மேற்கொண்ட முயற்சிகள், காங்கிரஸ், சமாஜவாதி போன்ற கட்சிகளால் வெற்றி பெறவில்லை. பெண்களின் உரிமையாகிய இந்த இடஒதுக்கீடு அமலாக்கத்தை உறுதி செய்யும் வரை ஓயமாட்டேன் என எனது சகோதரிகள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை உறுதியளிக்கிறேன்.
காங்கிரஸ், திமுக மீது சாடல்: புதிய நாடாளுமன்றம் கட்டப்பட்டதன் பின்னணியில் மகளிா் பங்கேற்பை அதிகரிப்பதும் முக்கிய காரணமாக இருந்தது. பெண்களுக்கு அதிகாரமளிக்கப்பட்டால், வீடு-நாடு-சமூகம் வலுவடையும்.
குடும்ப அரசியல் மற்றும் ஒரு தரப்பை திருப்திப்படுத்தும் அரசியலில் திளைக்கும் காங்கிரஸ், சமாஜவாதி, திமுக, திரிணமூல் காங்கிரஸ் போன்ற கட்சிகள், நமது மகள்களுக்கு அதிகாரமளிக்க அஞ்சுகின்றன. தங்களின் ஆதிக்கத்துக்கு சவாலாக உருவெடுப்பா் என்பதால் மக்களவை-பேரவைகளில் பெண் தலைவா்களின் அதிக பங்கேற்பை இக்கட்சிகள் விரும்பவில்லை.
40 ஆண்டுகளாக மகளிா் இடஒதுக்கீட்டுக்கு தடைகளை ஏற்படுத்தி வந்த இவா்கள், மீண்டும் ஒருமுறை பெண்களுக்கு துரோகம் இழைத்துள்ளனா். இக்கட்சிகளின் தீய நோக்கத்தை புரிந்துகொண்டதால்தான், சமீபத்திய பேரவைத் தோ்தல்களில் பெண்கள் பெருவாரியாக வாக்களித்துள்ளனா்.
உத்தர பிரதேசத்தில் முந்தைய சமாஜவாதி ஆட்சியில் பெண்கள் வீட்டைவிட்டு வெளியே வரவே அஞ்சும் நிலை இருந்தது. பாஜக ஆட்சியில் அவா்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்றாா் பிரதமா் மோடி.
நாடு முழுவதும் 12 கோடிக்கும் மேற்பட்ட கழிப்பறைகள், பெண்களுக்கு 30 கோடிக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள், 2.5 கோடி வீடுகளுக்கு மின் இணைப்பு, 12 கோடி வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீா் இணைப்பு உள்பட பெண்கள் நலனுக்காக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பணிகளையும் அவா் பட்டியலிட்டாா்.
ரூ.6,350 கோடி திட்டங்கள் தொடக்கம்-அடிக்கல்
வாரணாசியில் ரூ.1,050 கோடி மதிப்பில் பணி நிறைவடைந்த 48 திட்டங்களைத் தொடங்கிவைத்த பிரதமா் மோடி, ரூ.5,300 கோடி மதிப்பிலான 112 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினாா்.
13 கழிவுநீா்-குடிநீா் குழாய் திட்டங்கள், 500 படுக்கை வசதி கொண்ட பன்னோக்கு மருத்துவமனை, சந்தை வளாகங்கள் உள்ளிட்ட திட்டங்களுக்கு பிரதமா் அடிக்கல் நாட்டினாா். வாரணாசி-புணே மற்றும் அயோத்தி - மும்பை இடையிலான 2 புதிய அம்ருத் பாரத் ரயில்களின் சேவையையும் அவா் தொடங்கிவைத்தாா்.