பிரதமர் மோடி, அமித் ஷாவால் ஈர்க்கப்பட்டேன்: சுவாதி மாலிவால்!
பாஜகவில் இணைந்தது குறித்து சுவாதி மாலிவால்...
மாநிலங்களவை எம்.பி. ஸ்வாதி மாலிவால் ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகி பாரதீய ஜனதாவில் இணைந்துள்ளார்.
2024-ஆம் ஆண்டில் ஆம் ஆத்மி கட்சியின் தலைமைத்துவத்துடன் கடுமையான கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு வந்த நிலையில், அக்கட்சியிலிருந்து விலகிய ஸ்வாதி மாலிவால், மாநிலங்களவையில் உள்ள ஏழு ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர்கள் கொண்ட குழுவின் ஒரு பகுதியாகத் தற்போது பாஜகவுடன் இணைந்துள்ளார்.
தில்லியில் உள்ள பாஜக அலுவலகத்திற்குச் சென்ற ஸ்வாதி மாலிவாலை தில்லி மாநிலத் தலைவர் வீரேந்திர சச்தேவா, மத்திய இணை அமைச்சர் ஹர்ஷ் மல்ஹோத்ரா, நாடாளுமன்ற உறுப்பினர் யோகேந்திர சந்தோலியா மற்றும் தில்லி பாஜக பொதுச் செயலாளர் விஷ்ணு மிட்டல் ஆகியோர் முன்னிலையில் அக்கட்சியில் முறைப்படி இணைந்தார்.
Advertisement
Advertisement
பாஜகவில் இணைந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா தேசத்திற்காக ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க பணிகளால் நான் பெரிதும் ஈர்க்கப்பட்டேன். அவர்களிடமிருந்து உத்வேகம் பெற்று, நான் பாஜகவில் இணைந்துள்ளேன்.
தில்லி மகளிர் ஆணையத்தின் தலைவராகப் பணியாற்றிய காலத்தில் பாஜகவிடமிருந்து தனக்கு ஆதரவு கிடைத்துள்ளது. எவ்வித கட்டாயத்தின் பேரிலும் தான் அக்கட்சியில் இணையவில்லை.
இந்தக் கட்சியில் இணைவது எனக்குக் கட்டாயம் அல்ல; ஆனால், இங்கு நடைபெற்றுவரும் அனைத்துப் பணிகளையும் நான் மிகுந்த ஆர்வத்துடன் கவனித்து வருகிறேன்.
இறைவனுக்கும், ஒட்டுமொத்த பாஜக தலைமைத்துவத்திற்கும் நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன். இனிவரும் காலங்களில், இன்னும் அதிக வலிமையுடனும், உறுதியான ஆதரவுடனும் தில்லி மக்களுக்காக பணியாற்றுவேன்.
ஆம் ஆத்மி கட்சியைக் கடுமையாக விமர்சித்த மாலிவால், தில்லி அரசை வழிநடத்திய அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜரிவால் தில்லியை 'கொள்ளையடித்ததாகவும், தேசியத் தலைநகரின் உள்கட்டமைப்பை சீர்குலைத்ததாகவும் குற்றம் சாட்டினார்.
சாலைகள் மிகவும் மோசமான நிலையில் இருந்தன. குடிநீர் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. ஆம் ஆத்மி ஆட்சியின் போது, தில்லி மக்கள் அடிப்படை வசதிகளுக்கே பெரிதும் போராட வேண்டியிருந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளில், ரேகா குப்தா தலைமையிலான நிர்வாகம் இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
இந்தக் காரணத்தினால் தான் பாஜகவில் இணைந்தேன். இனி நான் தில்லி மக்களின் நலனுக்காகப் பணியாற்றுவேன் என்று அவர் தெரிவித்தார்.