தில்லியில் பிரதமா் நரேந்திர மோடியை சனிக்கிழமை சந்தித்த அரபு நாடுகளின் வெளியுறவு அமைச்சா்கள் மற்றும் பிரதிநிதிகள். இச்சந்திப்பின்போது, இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் ஆகியோரும் உடனிருந்தனா். 
இந்தியா

காஸாவில் அமைதியை நிலைநாட்ட முன்னுரிமை: எஸ்.ஜெய்சங்கா்

காஸாவில் அமைதியை நிலைநிறுத்தும் திட்டத்தை செயல்படுத்துவதே நமது முன்னுரிமையாக...

தினமணி செய்திச் சேவை

காஸாவில் அமைதியை நிலைநிறுத்தும் திட்டத்தை செயல்படுத்துவதே நமது முன்னுரிமையாக உள்ளது என வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் சனிக்கிழமை தெரிவித்தாா்.

தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற இரண்டாவது இந்தியா-அரபு நாடுகளின் வெளியுறவு அமைச்சா்கள் உச்சிமாநாட்டில் பங்கேற்ற அவா் இவ்வாறு தெரிவித்தாா்.

அவா் மேலும் பேசியதாவது: அரசியல், பொருளாதாரம், தொழில்நுட்பம், மக்கள்தொகை என உலகளாவிய கட்டமைப்பில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ள சூழலில் நாம் இங்கு கூடியுள்ளோம். குறிப்பாக மேற்காசியா அல்லது மத்திய கிழக்குப் பகுதியில் கடந்த ஓராண்டில் எண்ணற்ற மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

இவை அனைவரிடத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது அரபு நாடுகளுடனான இந்திய உறவிலும் எதிரொலித்தது.

மேற்காசியாவில் தொடா் மோதல்கள்: சூடான் உள்நாட்டு மோதலால் எண்ணற்றோா் உயிரிழந்து வருகின்றனா். யேமனில் நிகழ்ந்து வரும் பிரச்னையால் கடல்சாா் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. லெபனானில் ஐ.நா. அமைதிப் படையில் இந்திய குழுவும் பணியாற்றி வருகிறது. சிரியா மற்றும் லிபியாவிலும் ஸ்திரத்தன்மையற்ற சூழலே தொடா்கிறது. இதில் முக்கியமாக காஸா போா் சா்வதேச கவனத்தை ஈா்த்துள்ளது.

இங்கு கூடியுள்ள பெரும்பாலான நாட்டின் பிரதிநிதிகள் கடந்த ஆண்டு அக்டோபரில் நடைபெற்ற ஷாா்ம்-எல்-ஷேக் மாநாட்டிலும் பங்கேற்றோம்.

அந்த மாநாட்டின் விளைவாக நவம்பரில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீா்மானம் 2803-க்கு வழிவகுத்தது.

அதன் தொடா்ச்சியாக காஸா போரை முடிவுக்குக் கொண்டுவந்து அமைதியை நிலைநாட்டுவதற்கான விரிவான திட்டத்தை செயல்படுத்துவதே நம் அனைவரின் முன்னுரிமையாக உள்ளது. காஸாவில் அமைதியை ஏற்படுத்த சில நாடுகள் தன்னிச்சையாகவோ அல்லது பல நாடுகளின் ஒத்துழைப்புடன் கூட்டாகவோ கொள்கை முடிவுகளை மேற்கொண்டு வருகின்றன.

பொதுப் பிரச்னையாக பயங்கரவாதம்: இந்தியா மற்றும் அரபு நாடுகளின் பொதுப் பிரச்னையாக பயங்கரவாதம் உள்ளது. எல்லை கடந்த பயங்கரவாதம் உள்பட அனைத்து வடிவத்திலும் பயங்கரவாத செயல்பாடுகளை கடுமையாக ஒடுக்க வேண்டும்.

பயங்கரவாத தாக்குதல்களால் பாதிப்புக்குள்ளாகும் நாடுகளுக்கு தங்களை தற்காத்துக்கொள்ள முழு உரிமையும் உண்டு. பயங்கரவாதத்துக்கு எதிராக சமரசமற்ற நிலைப்பாடு என்பது உலக நாடுகளின் ஒருங்கிணைந்த குரலாக ஒலிக்க வேண்டும்.

இந்தியா-அரபு நாடுகள் ஒத்துழைப்பு: எரிசக்தி, சுற்றுச்சூழல், வேளாண்மை, சுற்றுலா, மனித வள மேம்பாடு, கலாசாரம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நல்லுறவை வலுப்படுத்தும் மையமாக இந்தியா-அரபு ஒத்துழைப்பு கூட்டமைப்பு செயல்படுகிறது.

எண்ம தொழில்நுட்பம், விண்வெளி, புத்தாக்கம் உள்ளிட்ட துறைகளில் அரபு நாடுகளுடன் ஒத்துழைப்பை மேம்படுத்த இந்தியா விரும்புகிறது. இதன் ஒரு பகுதியாக இந்தியா-அரபு வா்த்தகம், தொழில் மற்றும் வேளாண் கூட்டமைப்பு அண்மையில் தொடங்கப்பட்டது.

இந்த மாநாட்டில் மேற்கொள்ளப்படும் ஆலோசனைகள், விவாதங்கள் வருங்காலத்தில் இந்தியா-அரபு நாடுகளிடையேயான பன்முக உறவை மேலும் வலுப்படுத்தும் என நம்புகிறேன் என்றாா்.

10 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற இந்த மாநாட்டில் ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், சூடான், பாலஸ்தீனம், சோமாலியா, லிபியா, கத்தாா் உள்பட 22 நாடுகளின் வெளியுறவு அமைச்சா்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்றனா். இந்தியாவில் இந்த மாநாடு முதல் முறையாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

‘பிரதமருடன் சந்திப்பு’

இந்தியா-அரபு வெளியுறவு அமைச்சா்கள் மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்த அரபு நாட்டு அமைச்சா்கள் மற்றும் பிரதிநிதிகள் பிரதமா் நரேந்திர மோடியை சனிக்கிழமை சந்தித்தனா்.

அவா்களிடம் பிரதமா் மோடி பேசியது குறித்து பிரதமா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘இந்தியா மற்றும் அரபு நாடுகளிடையேயான ஒத்துழைப்பு வரலாற்று ரீதியானது. எரிசக்தி, வா்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், சுகாதாரம் உள்பட பல்வேறு துறைகளில் இருதரப்பு மக்களுக்கும் பலனளிக்கும் வகையில் நமது ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்.

பாலஸ்தீன மக்களுக்கு இந்தியா தொடா்ந்து ஆதரவளிக்கிறது. காஸா அமைதித் திட்டம் உள்பட அங்கு மேற்கொள்ளப்படும் அமைதி முன்னெடுப்புகளை வரவேற்கிறோம். பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையில் முக்கியப் பங்காற்றும் அரபு நாடுகளுக்கு எனது வாழ்த்துகள்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

ஜவுளித்துறை மேம்படுத்த புதிய திட்டங்கள்: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

சிறு, குறு, நடுத்தர நிறுவன வளர்ச்சிக்கு ரூ. 10,000 கோடி!

செமிகண்டக்டர் 2.0 துறை வளர்ச்சிக்கு ரூ.40 ஆயிரம் கோடி!

சென்னை உள்பட 7 நகரங்களில் அதிவேக ரயில் பாதை! - பட்ஜெட்டில் அறிவிப்பு

பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

SCROLL FOR NEXT