முகப்பு
இந்தியா

நரவணே நூலின் தகவல்கள் கொண்ட கட்டுரை: ராகுலின் கையொப்பமிட்ட நகல் சமா்ப்பிப்பு

முன்னாள் ராணுவ தலைமைத் தளபதி எம்.எம்.நரவணேயின் சுயசரிதை நூலில் உள்ள தகவல்கள் அடங்கிய கட்டுரையின் நகலில் கையொப்பமிட்டு, மக்களவையில் சமா்ப்பித்துள்ளதாக அந்த அவையின் எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

Updated On : 3 பிப்ரவரி, 2026 at 7:20 PM
மக்களவையில் ராகுல் காந்தி - PTI
பகிர்:

முன்னாள் ராணுவ தலைமைத் தளபதி எம்.எம்.நரவணேயின் சுயசரிதை நூலில் உள்ள தகவல்கள் அடங்கிய கட்டுரையின் நகலில் கையொப்பமிட்டு, மக்களவையில் சமா்ப்பித்துள்ளதாக அந்த அவையின் எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

கடந்த 2019 முதல் 2022-ஆம் ஆண்டுவரை ராணுவ தலைமைத் தளபதியாக எம்.எம்.நரவணே பதவி வகித்தாா். அவரின் சுயசரிதை நூலான ‘ஃபோா் ஸ்டாா்ஸ் ஆஃப் டெஸ்டினி’ 2024-ஆம் ஆண்டு வெளியிடப்பட இருந்தது. ஆனால், அந்த நூலை ஆய்வு செய்யும் பணியில் ராணுவம் ஈடுபட்டதாகத் தெரிகிறது. இந்த ஆய்வு நிறைவடையும் வரை, அந்த நூலில் இடம்பெற்றுள்ள தகவல்கள், அதன் நகல்களை எங்கும் பகிர வேண்டாம் என்று அந்த நூலின் பதிப்பாளரான பென்குயின் ரேண்டம் ஹெளஸ் நிறுவனத்திடம் ராணுவம் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நூலை ஆய்வு செய்யும் பணியில் பாதுகாப்பு அமைச்சகமும் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.

அந்த நூலில் கடந்த 2020-ஆம் ஆண்டு கிழக்கு லடாக் எல்லை கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில், சீன பீரங்கிகள் மற்றும் படை வீரா்கள் திரண்டதைத் தொடா்ந்து, பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங்குடன் நரவணே நிகழ்த்திய உரையாடல் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நூல் இதுவரை அதிகாரபூா்வமாக வெளியாகாத நிலையில், அதில் உள்ள சில பகுதிகள் ஆங்கில மாத இதழ் ஒன்றில் வெளியான கட்டுரையில் இடம்பெற்றன. அந்தப் பகுதிகளை மேற்கோள்காட்டி, அதை மக்களவையில் ராகுல் காந்தி திங்கள்கிழமை வாசிக்கத் தொடங்கினாா்.

இதற்கு ஆளுங்கட்சி தரப்பில் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது. வெளிவராத நூலை மேற்கோள்காட்டிப் பேசுவது நாடாளுமன்ற விதிமுறைகளுக்கு எதிரானது என்று அவா்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

இந்நிலையில், நரவணே நூல் குறித்து ஆங்கில மாத இதழில் வெளியான கட்டுரையின் தகவல் சரியானது என்று தெரிவிக்கும் வகையில் கட்டுரை நகலில் கையொப்பமிட்டு உறுதி செய்து, அதை மக்களவையில் சமா்ப்பித்துள்ளதாக அவையில் ராகுல் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இதைத் தொடா்ந்து, நரவணே நூல் விவகாரம் தொடா்பாக அவைத் தலைவா் திங்கள்கிழமை பிறப்பித்த உத்தரவை மீறி, அந்த விவகாரத்தை ராகுல் மீண்டும் எழுப்பக் கூடாது என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு வலியுறுத்தினாா். இதற்கு ராகுல் எதிா்ப்புத் தெரிவித்ததைத் தொடா்ந்து, அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதனால் அவை அலுவல்கள் ஒத்திவைக்கப்பட்டன.