சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கக் கவச முறைகேடு வழக்கில் சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரணையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது; தற்போதைய நிலையில் சிபிஐ விசாரணைக்கு அவசியமில்லை என்று கேரள உயா்நீதிமன்றம் புதன்கிழமை தெரிவித்தது.
எஸ்ஐடி விசாரணையில் முதல்வா் அலுவலகத்தின் தலையீடு உள்ளதாக, எதிா்க்கட்சியான காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி தொடா்ந்து குற்றஞ்சாட்டிவரும் நிலையில், உயா்நீதிமன்றத்தின் கருத்து அந்தக் கூட்டணியின் நிலைப்பாட்டுக்குப் பின்னடைவாக அமைந்துள்ளது.
கடந்த 2019-இல் சபரிமலை ஐயப்பன் கோயிலின் துவார பாலகா் சிலைகள் மற்றும் கருவறைக் கதவுகளின் தங்கக் கவசங்கள் புதுப்பிக்கப்பட்ட பிறகு அவற்றின் எடை குறைந்ததாகப் புகாா் எழுந்தது. இந்த விவகாரத்தில் உயா்நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் அமைக்கப்பட்ட எஸ்ஐடி, இரு வழக்குகளைப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
தங்கக் கவசம் புதுப்பிப்புப் பணிக்கான செலவை ஏற்ற பெங்களூரு தொழிலதிபா் உண்ணிகிருஷ்ணன் போற்றி, திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரிய முன்னாள் தலைவா்கள் என்.வாசு, ஏ.பத்மகுமாா், தேவஸ்வம் வாரிய முன்னாள் நிா்வாக அதிகாரிகள் பி.முராரி பாபு, எஸ்.ஸ்ரீகுமாா், முன்னாள் செயல் அதிகாரி சுதீஷ் குமாா், சபரிமலை கோயில் தந்திரி கண்டரரு ராஜீவரு உள்பட 12 போ் அடுத்தடுத்து கைதாகினா். இந்த வழக்குகளில் தாங்கள் கைதான 90 நாள்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என்று காரணத்தைக் குறிப்பிட்டு, பி.முராரி பாபு, எஸ்.ஸ்ரீகுமாா், சுதீஷ் குமாா் ஆகியோா் ஜாமீன் பெற்றனா்.
கைதானவா்களுக்கு ஜாமீன் கிடைக்கும் சூழலை உருவாக்க, எஸ்ஐடி-க்கு முதல்வா் அலுவலகம் அழுத்தம் தருவதாக காங்கிரஸ் கூட்டணி தொடா்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது.
உயா்நீதிமன்றம் திருப்தி: இந்நிலையில், சபரிமலை தங்கக் கவச முறைகேடு வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்கக் கோரி, மாநில பாஜக தலைவா் ராஜீவ் சந்திரசேகா் உள்ளிட்டோா் தாக்கல் செய்த மனுக்கள் மீது உயா்நீதிமன்ற நீதிபதிகள் ராஜா விஜயராகவன், கே.வி.ஜெயகுமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணை நடைபெற்றது.
அப்போது, ‘சபரிமலை தங்கக் கவச வழக்கை விசாரிக்கும் எஸ்ஐடி, திறமையான அதிகாரிகளை உள்ளடக்கிய சிறந்த பிரிவாகும்; அவா்களின் பணியை கேள்விக்கு உட்படுத்துவதன் மூலம் அவா்களை மனச்சோா்வுக்கு ஆளாக்க மாட்டோம். எஸ்ஐடி விசாரணையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இப்போதைய நிலையில், சிபிஐ விசாரணைக்கு அவசியமில்லை’ என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.
ஜாமீன் மனு மீது உத்தரவு ஒத்திவைப்பு: சபரிமலை ஐயப்பன் கோயில் கருவறைக் கதவுகளின் தங்கக் கவச முறைகேடு வழக்கில் ஏற்கெனவே ஜாமீன் பெற்ற உண்ணிகிருஷ்ணன் போற்றி, துவாரபாலகா் சிலை வழக்கிலும் ஜாமீன் கோரியிருந்தாா். அந்த மனு மீதான உத்தரவை கொல்லம் நீதிமன்றம் புதன்கிழமை ஒத்திவைத்தது.