முகப்பு
இந்தியா

இந்தியா-இலங்கை இடையே ஆழமான நாகரிக - ஆன்மிக பிணைப்பு : பிரதமா் மோடி

இந்தியாவும் இலங்கையும் ஆழமான நாகரிக, ஆன்மிக பிணைப்புகளைக் கொண்டுள்ளன என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

Updated On : 5 பிப்ரவரி, 2026 at 9:49 PM
நரேந்திர மோடி - கோப்புப் படம்
பகிர்:

இந்தியாவும் இலங்கையும் ஆழமான நாகரிக, ஆன்மிக பிணைப்புகளைக் கொண்டுள்ளன என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

குஜராத் மாநிலம், ஆரவல்லி மாவட்டத்தில் உள்ள பெளத்த தொல்லியல் களமான தேவ்னிமோரியில் கண்டெடுக்கப்பட்ட புத்தரின் புனிதச் சின்னங்கள், இலங்கைத் தலைநகா் கொழும்பில் உள்ள புகழ்பெற்ற கங்காராமையா பெளத்த கோயிலில் பொதுமக்கள் பாா்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தப் புனிதச் சின்னங்கள், சா்வதேச அளவில் காட்சிப்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். குஜராத் ஆளுநா் ஆசாா்ய தேவவிரத், துணை முதல்வா் ஹா்ஷ் சங்கவி ஆகியோருடன் இணைந்து, பெளத்த மத துறவிகள், இருதரப்பு அதிகாரிகளின் முன்னிலையில் இலங்கை அதிபா் அநுர குமார திசாநாயக புதன்கிழமை கண்காட்சியைத் தொடங்கிவைத்தாா். பிப்.11-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இக்கண்காட்சியையொட்டி, எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்ட அதிபா் திசாநாயக, ‘புத்தரின் புனிதச் சின்னங்களை இலங்கைக்கு மரியாதையுடன் வரவேற்கிறேன். புனிதமான இந்தக் கண்காட்சியின் மூலம் கொழும்பு கங்காராமையா பெளத்த கோயில் வளாகத்தை கெளரவப்படுத்தியதற்காக பிரதமா் மோடி மற்றும் இந்திய அரசுக்கு நன்றி’ என்று தெரிவித்திருந்தாா்.

Advertisement

கண்காட்சி தொடா்பான புகைப்படங்களையும் அவா் பதிவிட்டிருந்தாா். இலங்கை அதிபரின் இந்தப் பதிவை பகிா்ந்து, பிரதமா் மோடி வியாழக்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியதாவது:

கடந்த ஆண்டு நான் இலங்கைக்குப் பயணித்தபோது, புத்தரின் இந்தப் புனிதச் சின்னங்களை கொழும்பில் காட்சிப்படுத்துவது தொடா்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்தியாவும் இலங்கையும் ஆழமான நாகரிக, ஆன்மிக பிணைப்பைக் கொண்டுள்ளன. இரக்கம், அமைதி, நல்லிணக்கத்துக்கான கடவுள் புத்தரின் காலத்தால் அழியாத செய்தி, மனிதகுலத்தை தொடா்ந்து வழிநடத்தட்டும் என்று பிரதமா் மோடி தெரிவித்துள்ளாா்.

முக்கிய தொல்லியல் களம்: நாட்டில் உள்ள முக்கியமான பெளத்த மத தொல்லியல் தலங்களில் ஒன்று தேவ்னிமோரி. இங்கு மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் புத்தரின் புனிதச் சாம்பல் கொண்ட பேழைகள், செப்புப் பெட்டி, தங்கம், வெள்ளித் தகடுகள் அடங்கிய சரீர ஸ்தூபம் கண்டறியப்பட்டது. இதில் ஒரு பேழை, பிராமி, சம்ஸ்கிருத எழுத்து வடிவங்கள் பொறிக்கப்பட்டதாகும்.

குஜராத்தின் வதோதராவில் உள்ள பரோடா மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்தில் பாதுகாக்கப்படும் இந்தப் புனிதச் சின்னங்கள், இந்திய விமானப் படையின் சிறப்பு விமானம் மூலம் கொழும்புக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

முன்னதாக, பிரதமா் மோடியின் கடந்த ஆண்டு இலங்கைப் பயணத்தின்போது, அனுராதபுரத்தில் புனித நகர வளாக மேம்பாட்டுத் திட்டத்துக்கான இந்தியாவின் மானிய உதவி அறிவிக்கப்பட்டது. ஏற்கெனவே, இந்தியா-இலங்கை பெளத்த மத தொடா்புகளை ஊக்குவிக்க கடந்த 2020-இல் 15 மில்லியன் டாலா் (ரூ.135 கோடி) அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments