முகப்பு
இந்தியா

உச்ச, உயர் நீதிமன்ற நீதிபதிகளில் 80% உயர் சாதியினர்! மாநிலங்களவையில் தகவல்!

நீதிபதிகள் நியமனத்தில் இட ஒதுக்கீடு முறையை அமல்படுத்துமாறு திமுக எம்.பி. வில்சன் தனிநபர் மசோதா தாக்கல்

Updated On : 6 பிப்ரவரி, 2026 at 2:46 PM
உச்ச நீதிமன்றம் - கோப்புப் படம்
பகிர்:

நீதிபதிகள் நியமனத்தில் இட ஒதுக்கீடு முறையை அமல்படுத்துமாறு தனிநபர் மசோதாவை மாநிலங்களவையில் திமுக எம்.பி. வில்சன் தாக்கல் செய்துள்ளார்.

உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் பேசிய திமுக எம்.பி.யான பி. வில்சன், பிற்படுத்தப்பட்ட, பட்டியல் மற்றும் பழங்குடியினர் வகுப்புகளை சேர்ந்த மக்கள் தொகைக்கு ஏற்ப நீதிபதிகள் நியமிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும், இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில், "நமது இந்திய அரசியல் சாசனம் 76-ஆவது ஆண்டில் அடிெயடுத்து வைக்கும் இந்த வேளையில், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் நியமனத்தில் சமூகத்தின் பல்வேறு பிரிவினருக்கான பிரதிநிதித்துவம் குறைந்து வரும் போக்கு கவலைக்குரியதாக இருக்கிறது. இந்தியாவின் அற்புதமான பன்முகத்தன்மை கொண்ட சமூகத்தைப் பிரதிபலிப்பதாக இல்லாத வகையில் உயர் நீதிமன்றங்களில் பன்முகத்தன்மைப் பற்றாக்குறை உள்ளது.

உச்சநீதிமன்றத்திலும் - உயர்நீதிமன்றங்களிலும் பல்வேறு சமூக குழுக்கள் போதிய பிரதிநிதித்துவம் இல்லாமல் உள்ளன. உயர்நீதிமன்ற நீதிபதிகளின் நியமனச் செயல்முறையில் வெளிப்படையான பாகுபாடு காணப்படுகிறது.

2021 முதல் 2026 வரையிலான காலகட்டத்தில், நாட்டின் பல்வேறு உயர் நீதிமன்றங்களுக்கு நியமிக்கப்பட்ட நீதிபதிகளில் ஓபிசி, எஸ்சி மற்றும் எஸ்டி சமூகத்தினரின் பிரதிநிதித்துவம் குறைவாக உள்ளது குறித்து மத்திய சட்ட அமைச்சர் வழங்கிய தரவுகள் மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.

2021 ஜனவரி 1 முதல் 2026 ஜனவரி 31 வரை நியமிக்கப்பட்ட 593 நீதிபதிகளில், 26 பேர் எஸ்சி சமூகத்தையும் , 14 பேர் எஸ்டி சமூகத்தையும், 80 பேர் ஓபிசி சமூகத்தையும் சேர்ந்தவர்கள்.

சதவீத அடிப்படையில் பார்த்தால், 2021 - 2026 (மொத்த நீதிபதிகள்: 593)

எஸ்சி-யில் 4.38% (26), எஸ்டி-யில்: 2.36% (14), ஓபிசி-யில் 13.49% (80), உயர்சாதியினரில் 79.76% (473).

2024-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வாலிடம் இதே விவகாரம் குறித்து கேள்வி எழுப்பியபோது, 2018 முதல் 2024 வரை நியமிக்கப்பட்ட நீதிபதிகள் தொடர்பான தரவுகள் வழங்கப்பட்டன.

அவையும் தற்போதைய தரவுகளைப் போலவே மிக மோசமாக இருந்தது. 2018 முதல் 2024 அக்டோபர் 30 வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 684 பேர் உயர் நீதிமன்ற நீதிபதிகளாக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

எஸ்சி-யில் 3.07% (21), எஸ்டி-யில் 2.05% (14), ஓபிசி-யில் 11.99% (82), மற்றவை 82.89% (567).

இதன் மூலம், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகள் முறையாக பாதுகாக்கப்படாமல் போகலாம் என்பதும், அதன் விளைவாக அவர்களின் உரிமைகள் பறிக்கப்படும் அபாயம் உள்ளதும் உணர்த்தப்படுகிறது.

குறிப்பிட்ட சில சமூகங்களைச் சேர்ந்த, ஒருபடித்தான பின்புலம் கொண்ட நீதிபதிகள் மட்டுமே நீதித்துறையில் இருப்பது, சமூகத்தின் பன்முகத்தன்மை கொண்ட மதிப்புகளையும், விழுமியங்களையும் பிரதிபலிக்காது என்பது மக்களின் கவலையாக உள்ளது.

குறிப்பாக, கலாசாரம் மற்றும் தலைமுறை வேறுபாடு சார்ந்த விவகாரங்களில், அவர்கள் சட்டங்களைச் சமூகப் பார்வையோடு அணுகாமல் தங்களின் சொந்த சமூக-பண்பாட்டு பின்னணியை அடிப்படையாகக் கொண்டு அணுகும் சூழல் நிலவுகிறது. பன்முகத்தன்மை வாய்ந்த நீதித்துறை என்பது இன்றியமையாதது.

அது இல்லையெனில், போதிய பிரதிநிதித்துவம் இல்லாத சமூகக் குழுக்களின் உரிமைகளுக்கு ஆபத்து ஏற்படக்கூடும். அதனூடாக பாகுபாடு உருவாகும் வாய்ப்பும் அதிகரிக்கும். வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்ட சமூகங்களில் இருந்து நீதிபதிகள் இல்லாதிருப்பது உணர்த்துவது என்னவென்றால், இது தகுதி இல்லாமையாலோ அல்லது ஆட்கள் கிடைக்காததாலோ ஏற்பட்ட பற்றாக்குறை அல்ல, மாறாக அவர்களை நீதித்துறையிலிருந்து ஒதுக்கி வைக்க வேண்டும் என்பதற்காக எடுக்கப்பட்ட திட்டமிட்ட பாரபட்சமான முடிவே ஆகும்.

குறிப்பிட்ட சில சமூகப் பிரிவினரின் அதீதப் பிரதிநிதித்துவம், தற்போதைய கொலிஜியம் அமைப்பின் நடுநிலைமையை கேள்விக்குள்ளாக்குவதோடு, சமூகப் பிரிவினைகளைக் கடந்து நீதிபதிகளைத் தேர்வு செய்வதில் அந்த அமைப்பு தோல்வி அடைந்துள்ளதையும் வெளிக்காட்டுகிறது.

உயர்நீதித்துறை என்பது முன்னேறிய வகுப்பினருக்கானது மட்டுமல்ல. ஆகவே, உயர்நீதிமன்றங்கள் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் ஓபிசி/எஸ்சி/எஸ்டி சமூகங்களுக்கு மக்கள்தொகை விகிதத்துக்கேற்ப பிரதிநிதித்துவம் கிடைக்கவும், அதன் மூலம் சமூகத்தின் பன்முகத்தன்மை உறுதி செய்யப்படவும், அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள பிரதமர் நரேந்திர மோடியை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

summary

Nearly 80% of High Court Judges Appointed From 2021-26 Are Upper Castes

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.