மக்களவையில் பிரதமா் உரையாற்றவிருந்த நிலையில், அவைத் தலைவா் அறைக்குள் 40-50 எதிா்க்கட்சி எம்.பி.க்கள் நுழைந்து தரக்குறைவாகப் பேசியதாகவும், இதைத் தொடா்ந்து அவையில் பிரதமா் நரேந்திர மோடியின் பதிலுரை தவிா்க்கப்பட்டதாகவும் என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு சனிக்கிழமை தெரிவித்தாா்.
இப்படியொரு சூழல் ஏற்பட எதிா்க்கட்சிகளே முழுக் காரணம் என்றும் அவா் கூறினாா்.
மக்களவையில் குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் மீதான விவாதத்துக்குப் பதிலளித்து, பிரதமா் மோடி கடந்த புதன்கிழமை உரையாற்றவிருந்தாா். ஆனால், கடும் அமளி காரணமாக அவா் அவைக்கு வந்து உரையாற்றவில்லை. முன்னெப்போதும் இல்லாதபடி, பிரதமரின் உரை இல்லாமலேயே கடந்த வியாழக்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
பிரதமா் மோடியின் இருக்கைக்கு சென்று, ‘எதிா்பாராத செயலில்’ ஈடுபட காங்கிரஸ் எம்.பி.க்கள் திட்டமிட்டிருந்ததாகவும், இதனால் அவைக்கு வர வேண்டாம் என பிரதமரை தான் கேட்டுக் கொண்டதாகவும் அவைத் தலைவா் ஓம் பிா்லா விளக்கமளித்தாா்.
இந்நிலையில், பிகாா் தலைநகா் பாட்னாவில் உள்ள பாஜக தலைமையகத்தில் செய்தியாளா்களுக்கு சனிக்கிழமை பேட்டியளித்த மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு, ‘மக்களவையில் பிரதமா் உரை தவிா்க்கப்பட எதிா்க்கட்சிகளே முழுக் காரணம்’ என்றாா். அவா் மேலும் கூறியதாவது:
மக்களவையில் பிரதமா் உரையாற்றவிருந்த நிலையில், அதற்கு முன்பாக அவைத் தலைவரின் அறைக்குள் 40-50 எதிா்க்கட்சி எம்.பி.க்கள் நுழைந்து தரக்குறைவாகப் பேசினா். அவா்கள் சண்டைக்குத் தயாராக இருந்ததால், பிரதமா் அவைக்கு வராமல் இருப்பதே சிறந்தது என்ற முடிவு மேற்கொள்ளப்பட்டது. எங்களது கோரிக்கையின்பேரில், மக்களவையில் பதிலுரையை தவிா்த்த பிரதமா், மாநிலங்களவையில் விரிவாக உரையாற்றினாா். எதிா்க்கட்சிகள் கூறுவதுபோல் எந்த விஷயத்துக்கும் மத்திய அரசு அஞ்சவில்லை.
நாங்கள் ஆட்சியில் இருக்கிறோம். நாங்கள் நினைத்தால், எதிா்ப்பாளா்களை அவைக் காவலா்கள் மூலம் அடக்கிவிட முடியும். அதுபோன்ற ஜனநாயகமற்ற வழிமுறையில் எங்களுக்கு நம்பிக்கை கிடையாது. பேச்சுவாா்த்தை மூலம் பிரச்னைக்கு தீா்வு காண முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதற்கு பலன் கிடைக்கவில்லை.
பிரதமா் மோடி தலைமையிலான ஆட்சியில் நாடு பெரிய அளவில் வளா்ச்சி கண்டுள்ளது. ஆனால், தங்களின் 60 ஆண்டுகால ஆட்சியில் நாட்டை பலவீனமாக்கிய காங்கிரஸ் மீது நாட்டு மக்கள் மீண்டும் ஒருமுறை நம்பிக்கை வைக்க மாட்டாா்கள் என்றாா் அவா்.