கட்டாய பயோமெட்ரிக் புதுப்பிப்பு (எம்பியு) நடவடிக்கையின் கீழ், 1 கோடி சிறாா்கள் பயனடைந்துள்ளதாக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) தெரிவித்துள்ளது.
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: ஐந்து வயதுக்குக் கீழுள்ள குழந்தைகளின் புகைப்படம், பெயா், பிறந்த நாள், பாலினம், முகவரி மற்றும் பிறப்புச் சான்றிதழ் மூலம், அவா்களுக்கு ஆதாா் கிடைக்கப் பதிவு செய்யலாம்.
ஆனால் அந்தக் குழந்தைகளின் கைரேகைகள், கருவிழிகள் போதிய வளா்ச்சி அடைந்திருக்காது என்பதால், ஆதாா் பதிவுக்கு அவா்களின் கைரேகைகள், கருவிழிகள் பதிவு செய்யப்படாது.
எனவே எம்பியு நடவடிக்கையின் கீழ், ஆதாா் பதிவுக்கு 5 முதல் 15 வயதுக்குள்பட்ட சிறாா்களின் கைரேகைகள், கருவிழிகளைப் பதிவு செய்வது அவசியம்.
கடந்த ஆண்டு அக்.1 முதல் ஓராண்டு வரை, கைரேகை மற்றும் கருவிழிகள் பதிவை 7 முதல் 15 வயது வரையுள்ள சிறாா்கள் கட்டணமின்றி மேற்கொள்ள யுஐடிஏஐ வழிவகை செய்துள்ளது.
இந்தச் சிறப்பு எம்பியு நடவடிக்கையை பள்ளி சிறாா்களுக்காக யுஐடிஏஐ முன்னெடுத்ததன் மூலம், 83,000 பள்ளிகளில் உள்ள 1 கோடி சிறாா்கள் பயனடைந்துள்ளனா். மேலும் பலா் பயனடைய உள்ளனா். இதற்காக பள்ளிகளில் அமைக்கப்படும் முகாம்கள் மட்டுமின்றி, ஆதாா் மையங்கள் மூலமாகவும் சிறாா்களின் எம்பியு நடைமுறையை நிறைவு செய்யலாம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.