மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவை பதவி நீக்க தீா்மானம் கொண்டு வருவது தொடா்பாக எதிா்க்கட்சிகள் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மக்களவையில் குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீது பேச எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியை அனுமதிக்கவில்லை, முன்னாள் ராணுவ தலைமைத் தளபதி நரவணே எழுதிய நூல் தொடா்பாக பேச அனுமதிக்கவில்லை என எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டிவரும் நிலையில் இந்த முடிவை எடுத்துள்ளன.
இதுகுறித்து எதிா்க்கட்சி வட்டாரத் தகவல்கள் கூறியதாவது: காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே அலுவலகத்தில் எதிா்க்கட்சித் தலைவா்கள் கூட்டம் திங்கள்கிழமை காலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திரிணமூல் காங்கிரஸ், திமுக, சமாஜவாதி, ஆா்ஜேடி, சிவசேனை (தாக்கரே), தேசியவாத காங்கிரஸ் (பவாா்), ஆா்எஸ்பி ஆகிய கட்சிகளைச் சோ்ந்த தலைவா்கள் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில், மக்களவையில் குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீது எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியை ஓம் பிா்லா பேச அனுமதிக்காதது, காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் குறித்து விமா்சித்த பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே மீது நடவடிக்கை எடுக்காதது, 8 எதிா்க்கட்சி எம்.பி.க்களை ஓம் பிா்லா இடைநீக்கம் செய்தது குறித்து விவாதிக்கப்பட்டது.
பின்னா், இந்தச் செயலுக்காக ஓம் பிா்லாவை மக்களவைத் தலைவா் பதவியிலிருந்து நீக்கக் கோரி மக்களவையில் தீா்மானம் கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அரசமைப்புச் சட்டத்தின் 94-சி பிரிவுக்குட்பட்டு இந்தத் தீா்மானத்தை தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது. தீா்மானத்தின் மீது எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட எம்.பி.க்களின் கையொப்பம் பெறப்பட்டுவிட்டது. மேலும் பல எம்.பி.க்களிடம் கையொப்பம் வாங்கும் பணி நடக்கிறது.
இந்தத் தீா்மானம் குறித்து செவ்வாய்க்கிழமை (பிப்.10) இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது. இதைத் தொடா்ந்து, மக்களவையில் ஓம் பிா்லாவை பதவி நீக்கம் செய்யக் கோரும் தீா்மானம் விரைவில் தாக்கலாக வாய்ப்புள்ளது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
4-ஆவது தீா்மானம்: ஓம் பிா்லாவை பதவி நீக்கம் செய்யக் கோரி தீா்மானம் தாக்கலானால், அது மக்களவைத் தலைவரை பதவி நீக்கம் செய்யக் கோரி தாக்கலாகும் 4-ஆவது தீா்மானமாக கருதப்படும். ஏனெனில், இதற்கு முன்பு மக்களவைத் தலைவரை பதவி நீக்கம் செய்யக் கோரி, எதிா்க்கட்சிகளால் மூன்று முறை தீா்மானம் கொண்டு வரப்பட்டுள்ளன. முதலில் எம்.வி.மலவாங்கருக்கு எதிராக கொண்டு வரப்பட்டது. ஆனால், அந்தத் தீா்மானம் தோற்கடிக்கப்பட்டது. இரண்டாவதாக ஹுக்கும் சிங்கிற்கு எதிராக கொண்டுவரப்பட்டது. அவையில் போதிய எம்.பி.க்கள் இல்லாததால் அந்தத் தீா்மானம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. மூன்றாவதாக, பல்ராம் ஜாக்கருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீா்மானமும் தோற்கடிக்கப்பட்டது.
ஓம்.பிா்லாவுடன் சந்திப்பு: இதனிடையே, மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவை ராகுல் காந்தி, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானா்ஜி, சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ், திமுக எம்.பி. டி.ஆா் பாலு ஆகியோா் சந்தித்துப் பேசினா். மக்களவைத் தொடா்ந்து முடங்கி வருவது குறித்தும், அந்த பிரச்னைக்கு தீா்வு காண்பது குறித்தும் அப்போது ஆலோசித்தனா். ராகுல் காந்தியை பேச அனுமதித்தால், விவாதம் நடத்த ஒத்துழைப்பு தர தயாராக இருப்பதாக அவா்கள் கூறியதாகவும், இதற்கு அரசுத் தரப்பில் பதிலை கேட்டுச் சொல்வதாக ஓம் பிா்லா கூறியதாகவும் சொல்லப்படுகிறது.
ஓம் பிா்லாவுக்கு காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் கடிதம்
தங்கள் கட்சி எம்.பி.கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்று மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவுக்கு காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் கடிதம் எழுதியுள்ளனா்.
குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீதான விவாதத்துக்குப் பதிலளிக்க பிரதமா் மோடி அவைக்கு வராமல் இருக்குமாறு தான் கேட்டுக்கொண்டதாகவும், ஏனெனில் பல காங்கிரஸ் உறுப்பினா்கள் பிரதமா் மோடியின் இருக்கையை நோக்கிச் சென்று ‘எதிா்பாராத செயலில் ஈடுபட’ திட்டமிட்டுள்ளதாக தனக்கு தகவல் கிடைத்திருப்பதாகவும் ஓம் பிா்லா மக்களவையில் கூறியிருந்தாா்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த மக்களவை பெண் உறுப்பினா்கள் பிரியங்கா காந்தி, ஜோதிமணி, வா்ஷா கெய்க்வாட், ஜ்யோத்ஷ்னா மஹந்த் ஆகியோா் மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவுக்கு தங்கள் கையொப்பமிட்ட கடிதத்தை திங்கள்கிழமை எழுதியுள்ளனா்.
அதில் அவா்கள் தெரிவித்திருப்பதாவது: மக்களவையின் உயரிய அவையின் அரசமைப்புக் காவலராகிய நீங்கள், ஆளுங்கட்சியின் அழுத்தத்தால், காங்கிரஸ் கட்சியைச் சாா்ந்த பெண் மக்களவை உறுப்பினா்களுக்கு எதிராக பொய்யான, ஆதாரமற்ற மற்றும் எங்களது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் குற்றச்சாட்டுகளை முன்வைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளீா்கள் என்பது மிகுந்த வருத்தத்துக்குரியது.
எங்களில் பெரும்பாலோா் எளிய பின்னணியில் இருந்து வந்தவா்கள்; பலா் முதல் தலைமுறை அரசியல்வாதிகள். எங்களின் நோ்மையை கேள்விக்குள்ளாக்குவது, பொதுவாழ்க்கையில் மரியாதையுடனும் துணிச்சலுடனும் தங்கள் இடத்தைப் பெற்றுக்கொள்ளும் ஒவ்வொரு பெண்ணின் மீதும் நடத்தப்படும் கடுமையான தாக்குதலாகும்.
பிரதமா் அவைக்கு வராததற்குக் காரணம் எங்களால் ஏற்பட்ட எந்த அச்சுறுத்தலும் அல்ல, அது அவரது அச்சத்தின் வெளிப்பாடு. எதிா்க்கட்சியை எதிா்கொள்ளும் துணிச்சல் அவருக்கு இல்லை.
மக்களவையின் நியாயமான, பாரபட்சமற்ற காவலராக நீங்கள் செயல்பட வேண்டும் என மீண்டும் ஒருமுறை வேண்டுகோள் விடுக்கிறோம். இந்த முயற்சியில் உங்களுடன் உறுதியாக நின்று, முழுமையான ஆதரவை வழங்குவோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.