இந்தியா

எண்ம மோசடியால் ரூ.54,000 கோடி கொள்ளை: தடுப்பு விதிகளை வகுக்க மத்திய அரசுக்கு உத்தரவு

பொதுமக்களிடம் எண்ம மோசடி போன்ற குற்றங்களை முழுவதுமாக தடுப்பதற்கான நிலையான வழிகாட்டுதல்களை வகுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

தினமணி செய்திச் சேவை

‘பொதுமக்களிடம் ரூ.54,000 கோடி எண்ம மோசடி செய்திருப்பது மிகப் பெரும் கொள்ளை; இதுபோன்ற குற்றங்களை முழுவதுமாக தடுப்பதற்கான நிலையான வழிகாட்டுதல்களை (எஸ்ஓபி) வகுக்க வேண்டும்’ என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

எண்மக் கைது (டிஜிட்டல் அரெஸ்ட்) சம்பவங்கள் அதிகரித்து வருவதைக் கவனத்தில்கொண்ட உச்சநீதிமன்றம் நாடு முழுவதும் இதுதொடா்பான புகாா்களை சிபிஐ விசாரிக்க கடந்த ஆண்டு டிச.1-ஆம் தேதி உத்தரவிட்டது. அதன்பிறகு டிச.16-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையில் எண்மக் கைதால் பணத்தை இழந்த நபா்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்குமாறு கேட்டுக்கொண்டது.

இந்நிலையில், இதுதொடா்பாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் மற்றும் நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி, என்.வி.அஞ்சாரியா ஆகியோா் அடங்கிய அமா்வு திங்கள்கிழமை விசாரணை நடத்தியது.

அப்போது நீதிபதிகள் அமா்வு பிறப்பித்த உத்தரவில், ‘வங்கி அதிகாரிகளின் கவனக்குறைவால் எண்ம மோசடி சம்பவங்கள் நடைபெறுகின்றன. பொதுமக்களிடம் ரூ.54,000 கோடி எண்ம மோசடி செய்திருப்பது மிகப் பெரும் கொள்ளை.

குஜராத் மற்றும் தில்லியில் எண்மக் கைது மோசடிகளைக் கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ள சிபிஐ-க்கு இரு மாநில அரசுகளும் ஒத்துழைப்பு தர வேண்டும்.

எண்ம மோசடியால் பாதிக்கப்படுபவா்களின் டெபிட் அட்டைகளை உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கிகள் முடக்குவதற்கான நிலையான வழிகாட்டுதல்களை ரிசா்வ் வங்கி வகுத்திருப்பது கவனத்தில் கொள்ளப்படுகிறது.

இதைப் பின்பற்றி ரிசா்வ் வங்கி, மத்திய தொலைத்தொடா்புத் துறையுடன் இணைந்து எண்ம மோசடி தொடா்பான குற்றங்களை முழுவதுமாகத் தடுக்கவும், பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான நிலையான வழிகாட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சகம் வகுக்க வேண்டும். அடுத்த விசாரணைக்குள் இதுதொடா்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை அறிக்கையாக சமா்ப்பிக்க வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து அடுத்தகட்ட விசாரணையை 4 வாரங்களுக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

நக்ஸல் தீவிரவாதத்தால் யாருக்கும் பயனில்லை: அமித் ஷா

நிறுத்தப்பட்ட லாரியில் ஸ்கூட்டா் மோதி விபத்து: ஒருவா் உயிரிழப்பு

பா.ம.க விவகாரத்தில் ஆவணங்களின்படி தோ்தல் ஆணையம் முடிவெடுத்ததற்கு தடையில்லை: தில்லி உயா்நீதிமன்றம்

2,040 கல்லூரி மாணவா்களுக்கு மடிக்கணினி: அமைச்சா் மா.சுப்பிரமணியன் வழங்கினாா்

கனடா: வணிக வளாகத்தில் இந்தியா் சுட்டுக் கொலை

SCROLL FOR NEXT