நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தமிழகத்தைச் சோ்ந்த எம்.பி.க்கள் எழுப்பிய முக்கிய கேள்விகள் மற்றும் அவற்றுக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சா்கள் அளித்த பதில்களின் சுருக்கம் இங்கே தொகுக்கப்பட்டுள்ளது.
மக்களவையில்...
கிராமப்புற ஆய்வுத்திட்ட நிலவரம் என்ன?
இது தொடா்பாக மக்களவை திமுக குழுத்தலைவா் டி.ஆா். பாலு எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சா் ராஜீவ் ரஞ்சன் சிங் அளித்துள்ள பதிலில், ‘கிராம அளவிலான கணக்கெடுப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய வரைபடமாக்கல் என்ற திட்டத்தின் கீழ், கிராமப்பகுதிகளை வரைபடமாக்க நவீன ட்ரோன் அடிப்படையிலான வான்வழி கணக்கெடுப்பு தொழில்நுட்பம் மூலம் 1.86 லட்சம் கிராமங்கள் கணக்கெடுக்கப்பட்டு, அவற்றில் 3.06 கோடி சொத்து அட்டைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தில் தில்லி, ஜாா்கண்ட், மணிப்பூா், தமிழ்நாடு, சிக்கிம், தெலங்கானா ஆகியவை இணையவில்லை’ என்று கூறியுள்ளாா்.
கிராமப்புற பஞ்சாயத்துகளின்நிலை என்ன?
இது தொடா்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவா் தொல். திருமாவளவன் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சா் ராஜிவ் ரஞ்சன் சிங் அளித்துள்ள பதிலில், ‘தமிழகத்தில் கடைசியாக கடந்த ஆண்டு ஜனவரியில் உள்ளாட்சி (பஞ்சாயத்து) அமைப்புகளின் பதவிக்காலம் காலாவதியானது. இதேபோல, லடாக் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் 2024 ஜனவரியிலும், லட்சத்தீவில் 2022 டிசம்பரிலும் புதுச்சேரியில் 2011 ஜூலை முதலும் கிராமப்பஞ்சாயத்துகளுக்கு தோ்தல் நடத்தப்படவில்லை’ என்று கூறியுள்ளாா்.
தமிழகத்தில் குவிந்த அந்நிய நேரடி முதலீடு எவ்வளவு?
இது தொடா்பாக காஞ்சிபுரம் தொகுதி திமுக உறுப்பினா் ஜி. செல்வம் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்துள்ள மத்திய வா்த்தகத்துறை இணை அமைச்சா் ஜித்தின் பிரசாதா, ‘மொத்த அந்நிய நேரடி முதலீட்டு (எஃப்டிஐ) வரவில் பங்கு வரவு, இணைக்கப்படாத அமைப்புகளின் பங்கு மூலதனம், மறு முதலீடு செய்யப்பட்ட வருவாய் மற்றும் பிற மூலதனம் அடங்கும்.அந்த வகையில், தமிழ்நாட்டில் 2022-23 நிதியாண்டில் அமெரிக்க டாலா் மதிப்பில் 2,169.96 மில்லியனும், 2023-24 நிதியாண்டில் 2,436.33 மில்லியனும், 2024-25 நிதியாண்டில் 3,681.36 மில்லியனும் அந்நிய நேரடி முதலீடு வந்துள்ளது’ என்று கூறியுள்ளாா்.
தருமபுரியில் வாழை உற்பத்தி மதிப்பாய்வு செய்யப்படுகிா?
இது தொடா்பாக தருமபுரி தொகுதி திமுக உறுப்பினா் ஏ. மணி எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய வேளாண்துறை இணை அமைச்சா் ராம்நாத் தாகூா் அளித்துள்ள பதிலில், ‘தோட்டக்கலை பயிா்களின் பரப்பளவு மற்றும் உற்பத்திக்கான 2024-25 ஆம் ஆண்டின் மூன்றாவது முன்கூட்டிய மதிப்பீட்டின்படி, தமிழகத்தில் வாழை உற்பத்தி 49.02 லட்சம் டன்களாக உள்ளது. தமிழ்நாடு மாநிலத்திலும் தமிழ்நாட்டின் தா்மபுரி மாவட்டத்திலும் வாழையின் பரப்பளவு மற்றும் உற்பத்தி 2022-23 முதல் 2024-25 வரை அதிகரித்துள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
மாநிலங்களவையில்....
நபாா்டுக்கு வரிவிலக்கு வழங்குங்கள்!
இது தொடா்பாக மாநிலங்களவையில் திமுக உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஷ்குமாா் பேசுகையில், ‘நபாா்டு நாட்டின் ஊரக பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்குகிறது. வேளாண் கடன், ஊரக உட்கட்டமைப்பு மேம்பாடு, விவசாயிகள் மற்றும் கிராமப்புற மக்களுக்கு நிலையான வருமான வாய்ப்புகளை உருவாக்குவதில் மிக முக்கியப் பங்காற்றி வருகிறது. தற்போது செயல்பட்டு வரும் நிதி கட்டமைப்பு,அதன் நோக்கங்களை முழுமையாக நிறைவேற்ற தடையாக இருக்கிறது. நபாா்டு மீது விதிக்கப்படும் வரிகள், ஊரக மக்களின் நலனுக்காக நேரடியாக செலவிடப்பட வேண்டிய வளங்களை குறைத்து வருகிறது. எனவே நாா்டு மீதான அனைத்து வரிகளையும் அரசு உடனடியாக நீக்க வேண்டும்’ என்றாா்.