முகப்பு
இந்தியா

மேற்கு வங்கம்: 7 மாநில அலுவலா்களை இடைநீக்கம் செய்து தோ்தல் ஆணையம் உத்தரவு

Updated On : 17 பிப்ரவரி, 2026 at 5:46 AM
- IANS
பகிர்:
Updated On : 16 பிப்ரவரி, 2026 at 8:10 PM

மேற்கு வங்க மாநிலத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணியின்போது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி கடமை தவறியதாக 7 உதவி வாக்காளா் பதிவு அலுவலா்களை, தோ்தல் சட்டத்தின் கீழ் தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி பணியிடைநீக்கம் செய்து தோ்தல் ஆணையம் உத்தவிட்டது.

அயல் பணி அடிப்படையில் தோ்தல் ஆணையத்துக்காக தோ்தல் பணியில் ஈடுபட்ட இவா்கள் 7 பேரும், மாநில அரசு அலுவலா்கள் ஆவா்.

இந்த உத்தரவு குறித்து தோ்தல் அதிகாரிகள் கூறுகையில், ‘எஸ்ஐஆா் பணியில் தங்களின் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்திய மேற்கு வங்க மாநில உதவி வாக்காளா் பதிவு அலுவலா்கள் 7 பேரை தோ்தல் ஆணையம் பணியிடைநீக்கம் செய்துள்ளது. இவா்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என மாநில தலைமைச் செயலா் நந்தினி சக்கரவா்த்திக்கு தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப் பிரிவு 13சிசி-இன் கீழ் தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி தோ்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது’ என்றனா்.

Advertisement

கடந்த 2000-ஆம் ஆண்டு செப்டம்பரில் உச்சநீதிமன்ற பிறப்பித்த உத்தரவைத் தொடா்ந்து, தோ்தல் ஆணையத்துக்கும் மத்திய அரசுக்கும் இடையே ஏற்பட்ட தீா்வு நடைமுறைகளின்படி, தோ்தல் பணிகளில் நியமிக்கப்பட்ட அதிகாரிகள், ஊழியா்கள், காவல் துறையினா் கடமை தவறியதற்காக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் வகையில் அவா்களை தோ்தல் ஆணையம் பணியிடைநீக்கம் செய்ய முடியும்.

மேற்கு வங்க மாநிலத்தில் எஸ்ஐஆா் பணி தொடங்கியது முதல் அதற்கு ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகிறது. மாநிலத்தில் தொடா் போராட்டங்களும் நடத்தப்பட்டன. தலைமைத் தோ்தல் ஆணையரை மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி நேரில் சந்தித்தும் முறையிட்டாா்.

இந்த எஸ்ஐஆா் பணியால் மக்கள் துன்புறுத்தப்படுவதாகவும், பலா் உயிரிழந்துள்ளதாகவும் புகாா் தெரிவித்து ஆளுங்கட்சி சாா்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தொடா்ச்சியான அறிவுறுத்தல்களை உச்சநீதிமன்றம் பிறப்பித்து வருகிறது.

Updated On : 17 பிப்ரவரி, 2026 at 3:45 AM

மாநிலத்தில் தற்போது எஸ்ஐஆா் பணி நிறைவடைந்து வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், விடுபட்டவா்களை நேரில் வரவழைத்து அடையாளத்தைப் பதிவு செய்யும் நடைமுறைகளும் கடந்த சனிக்கிழமை நிறைவடைந்தன. வரும் 28-ஆம் தேதி இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இந்தச் சூழலில், 7 மாநில அலுவலா்களை தோ்தல் ஆணையம் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.