வெளி மாநில வாக்காளர்களைச் சேர்க்கும் பாஜகவினர்! தேர்தல் ஆணையத்துக்கு மமதா கடிதம்!
தேர்தல் ஆணையத்துக்கு முதல்வர் மமதா பானர்ஜி கடிதம்...
மேற்கு வங்க வாக்காளர் பட்டியலில் வெளி மாநில வாக்காளர்களைச் சேர்க்கும் முயற்சியில் பாஜகவினர் ஈடுபட்டு வருவதாக முதல்வர் மமதா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
மேற்கு வங்கத்திற்கு ஏப். 23, 29 என இரு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி கட்சிகள் அங்கு தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன.
அங்கு எஸ்ஐஆர் பணிகள் தொடங்கப்பட்டது முதலே அதற்கு முதல்வர் மமதா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். போலி வாக்காளர்கள் சேர்க்கப்படுவதாகவும் உண்மையான வாக்காளர்கள் நீக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டி வருகிறார்.
இந்நிலையில் மேற்குவங்க வாக்காளர் பட்டியலில் வெளி மாநிலத்தவர்களைச் சேர்க்க பாஜகவினர் முயற்சி செய்தது தெரிய வந்துள்ளதாகவும் படிவம் 6 மூலமாக ஆயிரக்கணக்கான போலி படிவங்கள் சமர்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகிறார்.
"இந்தியத் தேர்தல் ஆணையம், பாஜகவுடன் இணைந்து செயல்படுகிறது. பாஜகவும் தேர்தல் ஆணையமும் ஜனநாயக, அரசியலமைப்பு உரிமைகளைப் பறித்து வருகின்றன. வாக்காளர் பட்டியலில் சிலரை மட்டும் குறித்துவைத்து நீக்குகிறார்கள். அதேபோல மேற்குவங்கத்தில் வசிக்கத்தவர்கள் படிவம் 6 மூலமாக சேர்க்கப்படுகிறார்கள். இது மிகவும் ஒரு மோசமான சதி.
மேற்கு வங்க வாக்காளர் பட்டியலில் வெளிமாநிலத்தவர்களைச் சேர்ப்பதற்காக, ஆயிரக்கணக்கான மோசடியான படிவம் 6 விண்ணப்பங்களை பாஜக தொண்டர்கள் சமர்ப்பித்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 60 லட்சத்திற்கும் அதிகமான உண்மையான வாக்காளர்களின் விண்ணப்பங்கள் இன்னும் நிலுவையில் உள்ளன. ஆனால் சந்தேகத்திற்குரிய விண்ணப்பங்கள் விரைந்து ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. இது சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் மீதான நேரடித் தாக்குதல்" என்று குற்றம்சாட்டிய அவர் இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
தேர்தல் ஆணையம் இதனை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.