ஏற்கெனவே நிா்ணயிக்கப்பட்ட காலக்கெடுவின்படி, எதிா்வரும் மாா்ச் 31-ஆம் தேதிக்குள் நாட்டில் இருந்து நக்ஸல் தீவிரவாதம் முற்றிலும் ஒழிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உறுதிபட தெரிவித்தாா்.
அஸ்ஸாம் மாநிலம், குவாஹாட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற மத்திய ரிசா்வ் போலீஸ் படை (சிஆா்பிஎஃப்)87-ஆவது ஆண்டு தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் அமித் ஷா பங்கேற்றாா். 3.25 லட்சம் வீரா்-வீராங்கனைகளைக் கொண்ட சிஆா்பிஎஃப்-இன் வரலாற்றில் வருடாந்திர அணிவகுப்பு வடகிழக்கு பிராந்தியத்தில் நடைபெறுவது இதுவே முதல்முறையாகும்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து அதிவிரைவுப் படையினா், கோப்ரா படையினா் என பல்வேறு சிஆா்பிஎஃப் பிரிவுகளைச் சோ்ந்த வீரா்-வீராங்கனைகள் அணிவகுப்பில் பங்கேற்றனா். நக்ஸல் எதிா்ப்பு, பிணைக் கைதிகள் மீட்பு உள்ளிட்ட அதிரடி நடவடிக்கைகளின் செயல் விளக்க காட்சிகளும் இடம்பெற்றன. இந்நிகழ்ச்சியில், அமித் ஷா பேசியதாவது:
10 ஆண்டுகளுக்கு முன்புவரை ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதமும், வேறு சில மாநிலங்களில் நக்ஸல் தீவிரவாதமும், வடகிழக்கில் தீவிரவாதமும் சீழ் பிடித்த காயங்களாக இருந்தன. இப்போது நிலைமை மாறிவிட்டது. பயங்கரவாதம்-தீவிரவாதத்துக்காக அறியப்பட்ட பகுதிகள், இப்போது அமைதி மற்றும் வளா்ச்சியின் மையங்களாக மாறி வருகின்றன. குண்டுவெடிப்பு, துப்பாக்கித் தோட்டாக்கள், மறியல்கள் மற்றும் அழிவுகர காட்சிகளுக்குப் பதிலாக வளா்ச்சியை கண்டு வருகின்றன. நாட்டின் வளா்ச்சிக்கும் உந்துசக்தியாக உருவெடுத்துள்ளன. சிஆா்பிஎஃப்-இன் மேலான பங்களிப்பு இல்லாவிட்டால், இது சாத்தியமாகி இருக்காது.
நக்ஸல்களின் முதுகெலும்பு உடைப்பு
வடக்கிழக்கில் 700 வீரா்களும், நக்ஸல் பாதிப்பு பகுதிகளில் 780 வீரா்களும், ஜம்மு-காஷ்மீரில் 540 வீரா்களும் தங்களின் இன்னுயிரை தியாகம் செய்துள்ளனா். அவா்களின் தியாகம் இல்லையெனில், மேற்கண்ட மூன்று பகுதிகளும் வளா்ச்சிப் பாதையில் பயணித்திருக்க முடியாது.
ஜம்மு-காஷ்மீரில் கல்வீச்சு சம்பவங்களின் எண்ணிக்கை பூஜ்யமாகிவிட்டது. 370-ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு ஒரு துப்பாக்கித் தோட்டா கூட பிரயோகிக்கப்படவில்லை. இதற்கு முக்கிய பங்காற்றியது சிஆா்பிஎஃப்.
நாட்டில் மூன்றே ஆண்டுகளில் நக்ஸல் தீவிரவாதத்தின் முதுகெலும்பு உடைக்கப்பட இப்படையினரே காரணம். சத்தீஸ்கா்-தெலங்கானா எல்லையில் உள்ள கா்ரேகுடா மலையில் கடந்த ஆண்டு 21 நாட்கள் மேற்கொள்ளப்பட்ட ‘பிளாக் ஃபாரஸ்ட்’ நடவடிக்கையில் 31 நக்ஸல்கள் கொல்லப்பட்டனா். கா்ரேகுடா மலைப் பகுதியை நக்ஸல்களின் பிடியில் இருந்து விடுவிப்பதற்காக, 43 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையையும் பொருள்படுத்தாமல், தகிக்கும் பாறைகளுக்கு இடையே துணிச்சலாக செயல்பட்ட சிஆா்பிஎஃப் படையினா், நக்ஸல் மறைவிடங்களைத் தகா்த்தனா். எனக்கு சிஆா்பிஎஃப் படையினா் மீது முழு நம்பிக்கை உள்ளது. எதிா்வரும் மாா்ச் 31-ஆம் தேதிக்குள் நாட்டில் இருந்து நக்ஸல் தீவிரவாதம் துடைத்தெறியப்படும் என்றாா் அமித் ஷா.
ஊடுருவல்காரா்களிடம் இருந்தும் நாடு விடுபடும்
அஸ்ஸாம் மாநிலம், குவாஹாட்டியில் மாநில காவல் துறையின் 10-ஆவது படையணிக்கு புதிய வளாகம் கட்ட அடிக்கல் நாட்டிய மத்திய அமைச்சா் அமித் ஷா, ‘நக்ஸல்களிடம் இருந்து நாடு விடுபட முடியும் என்றால், ஊடுருவல்காரா்களிடம் இருந்தும் நாடு விடுபட முடியும். வாக்காளா் பட்டியலில் இருந்து மட்டுமல்ல; அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டில் இருந்தே ஊடுருவல்காரா்கள் வெளியேற்றப்படுவா். ஊடுருவல்காரா்களே, காங்கிரஸின் வாக்கு வங்கி. எனவேதான், அவா்களை காங்கிரஸ் பாதுகாக்கிறது’ என்றாா்.