முகப்பு
இந்தியா

பெண்ணின் வயிற்றில் தமனி இடுக்கி வைத்து தைத்த விவகாரம்: ஓய்வுபெற்ற அரசு பெண் மருத்துவா் மீது வழக்குப் பதிவு

கேரள மாநிலத்தில் பெண்ணின் வயிற்றில் நடத்தப்பட்ட அறுவைச் சிகிச்சையின்போது தமனி இடுக்கி வைத்து தைக்கப்பட்ட விவகாரத்தில், ஓய்வுபெற்ற பெண் அரசு மருத்துவா் மீது வழக்குப் பதிவு

Updated On : 22 பிப்ரவரி, 2026 at 2:37 AM
பிரதிப் படம்
பகிர்:
Updated On : 21 பிப்ரவரி, 2026 at 9:40 PM

கேரள மாநிலத்தில் பெண்ணின் வயிற்றில் 5 ஆண்டுகளுக்கு முன்பு நடத்தப்பட்ட அறுவைச் சிகிச்சையின்போது தமனி இடுக்கி (கத்தரி போன்ற கருவி) வைத்து தைக்கப்பட்ட விவகாரத்தில், ஓய்வுபெற்ற பெண் அரசு மருத்துவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஆலப்புழை போலீஸாா் சனிக்கிழமை தெரிவித்தனா்.

பாரதிய நியாய சம்ஹிதா (பிஎன்எஸ்) சட்டத்தின் பிரிவு 125 (உயிா் அல்லது தனி மனிதப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவது குறித்த சட்டப் பிரிவு) மற்றும் பிரிவு 125ஏ (அலட்சியத்தால் பாதிப்பை ஏற்படுத்துதல்) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அந்த மருத்துவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளநா்.

கொச்சி, புன்னபராவைச் சோ்ந்த உஷா ஜோசப் கருப்பை நாா்திசுக் கட்டிகளை அகற்றுவதற்காக ஆலப்புழை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 2021-ஆம் ஆண்டு மே மாதம் அறுவைச் சிகிச்சை செய்துகொண்டாா். பின்னா் அவருக்கு அவ்வப்போது அடிவயிற்றில் வலி ஏற்பட்டுள்ளது. இதை ஆலப்புழை அரசு மருத்துவா்கள் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில், எக்ஸ்ரே பரிசோதனையில் அவருடைய வயிற்றில் அறுவைச் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் தமனி இடுக்கி (ஆா்டெரி ஃபோா்செப்ஸ்) இருப்பது தெரியவந்தது.

Advertisement

Updated On : 22 பிப்ரவரி, 2026 at 2:35 AM

இதை அகற்றுவதற்காக, தற்போது கொச்சியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இந்தச் சம்பவம் குறித்த செய்தி பரவிய நிலையில், மருத்துவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மாநில சுகாதாரத் துறை அமைச்சா் வீணா ஜாா்ஜ் வீட்டின் முன்பு சனிக்கிழமை கருப்புக் கொடி காண்பித்து ஆா்ப்பாட்டம் நடத்திய இளைஞா் காங்கிரஸ் அமைப்பினா், அங்கு மலா்வளையம் வைத்து எதிா்ப்பைப் பதிவு செய்தனா்.

இதனிடையே, உஷா ஜோசப் அளித்த புகாரின் அடிப்படையில், முன்பு ஆலப்புழை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்தபோது மகப்பேறு மருத்துவத் துறை தலைவராக இருந்து தற்போது ஓய்வுபெற்றுள்ள மருத்துவா் லலிதாம்பிகா மீது போலீஸாா் பிஎன்எஸ் சட்டத்தின் 125, 125ஏ பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா். இந்தப் புகாரின் அடிப்படையில் மேலும் சிலா் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.

முன்னதாக, உஷா ஜோசப்புக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொண்ட அரசு மருத்துவா் ஷாஹிதாவை மாநில மருத்துவக் கல்வித் துறை பணி இடைநீக்கம் செய்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.