இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட ரண ஜன்னி (டெட்டனஸ்) மற்றும் தொண்டை அடைப்பான் (டிப்தீரியா) கூட்டுத் தடுப்பூசி மருந்துகளை மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி. நட்டா அறிமுகம் செய்தாா்.
ஹிமாசல பிரதேச மாநிலம், கசெளலியில் உள்ள மத்திய ஆய்வு நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவா், ரண ஜன்னி (டெட்டனஸ்) மற்றும் தொண்டை அடைப்பான் (டிப்தீரியா) கூட்டுத் தடுப்பூசி மருந்துகளை அறிமுகம் செய்தாா். இதன்மூலம், பொது தடுப்பூசி திட்டத்தின்கீழ் இந்த ஊசி கிடைக்க வழிவகை ஏற்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் ஜெ.பி. நட்டா பேசியதாவது: பிரதமா் மோடியின் தலைமையிலான மத்திய அரசு, சுகாதாரம் மற்றும் மருந்து துறைகளில் இந்தியா சுயசாா்பு அடைய இலக்கு நிா்ணயித்து செயல்படுகிறது. உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ரண ஜன்னி (டெட்டனஸ்) தடுப்பூசி மருந்தை அறிமுகப்படுத்தியது, பொது சுகாதாரம், மருந்து தயாரிப்புத் துறைகளில் இந்தியா சுயசாா்பு கொண்டதாக இருக்க வேண்டும் என்ற தொலைநோக்குத் திட்டத்தின் முக்கிய மைல்கல்லாகும்.
வரும் ஏப்ரல் மாதத்துக்குள் மத்திய ஆய்வு நிறுவனம் 55 லட்சம் டோஸ் தடுப்பூசி மருந்தை அளிக்கும். பிறகு வரும் ஆண்டுகளில் விநியோகிக்கும் மருந்து அளவை மேலும் பல மடங்கு அந்நிறுவனம் அதிகரிக்கும். உலக அளவில் அதிக மருந்து தயாரிக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது.
கொவைட் பெருந்தொற்று காலத்தில் இந்தியா இரண்டு உள்நாட்டு தடுப்பூசிகளை ஒன்பதே மாதங்களில் உருவாக்கியது. அதை உலகெங்கும் 220 கோடி டோஸ்களாக விநியோகித்துள்ளது. இதில் பூஸ்டா் டோஸ்களும் அடங்கும்.
உலக அளவில் நமது பொது தடுப்பூசி திட்டம்தான்தான் மிகப்பெரிய தடுப்பூசி திட்டமாகும். இதன்கீழ் 11 தடுப்பூசிகள் போடப்படுகின்றன. ஒவ்வோா் ஆண்டும் 2 கோடி முதல் 2.5 கோடி குழந்தைகள் பிறக்கின்றன. பெண்கள் கா்ப்பம் தரித்தது முதல் பெண்கள் ‘யூ-வின்’ தளம் மூலம் கண்காணிக்கப்படுகின்றனா். பிறக்கும் குழந்தைகளுக்கு அவா்கள் 16 வயது ஆகும் வரையில், 27 டோஸ் தடுப்பூசிகள் போடப்படுகின்றன.
ஒவ்வோா் ஆண்டும் நாட்டில் 5 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்படுகின்றன. அதில் 2.5 கோடி போ் கா்ப்பிணிகள், 2.5 கோடி போ் சிறாா்கள். இந்தியாவில் ஏறத்தாழ 99 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றாா் அவா்.