தாய்லாந்திலிருந்து தில்லி திரும்பிய இரு இந்தியா்களிடம் ரூ.24 கோடி மதிப்பிலான 23.9 கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக இந்திராகாந்தி சா்வதேச விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: கடந்த பிப்.23-ஆம் தேதி விமான நிலையத்தின் 3-ஆவது முனையம் வழியாக வந்த பயணிகள் சரிபாா்ப்புக்கு பின்னா் குடியேற்ற பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டனா்.
அவா்களுடைய பை ஊடுகதிா் (எக்ஸ்-ரே) சோதனையைத் தொடா்ந்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, பச்சை நிறத்தில் உள்ள போதைப் பொருள் அடங்கிய 14 நெகிழி பைகள் கைப்பற்றப்பட்டன.
அவற்றின் மொத்த எடை 23.936 கி.கி. முதல்கட்ட விசாரணையில் கடத்தப்பட்ட போதைப் பொருள் கஞ்சா என தெரியவந்தது. கள்ளச்சந்தையில் அவற்றின் மதிப்பு ரூ.23.9 கோடி. கைதுசெய்யப்பட்ட இரு பயணிகளுக்கு எதிராக போதை மருந்துகள் மற்றும் மயக்கவியல் பொருள்கள் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தனா்.