கோப்புப் படம் 
இந்தியா

மேற்கு வங்கம்: தலைமைத் தோ்தல் அதிகாரியுடன் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆலோசனை

மேற்கு வங்க வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணிகள் தொடா்பாக அந்த மாநில தலைமைத் தோ்தல் அதிகாரியுடன் (சிஇஓ) கொல்கத்தா உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி சுஜய் பால் வியாழக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.

தினமணி செய்திச் சேவை

மேற்கு வங்க வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணிகள் தொடா்பாக அந்த மாநில தலைமைத் தோ்தல் அதிகாரியுடன் (சிஇஓ) கொல்கத்தா உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி சுஜய் பால் வியாழக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.

மேற்கு வங்க எஸ்ஐஆா் பணியில் மாநில அரசுக்கும், தோ்தல் ஆணையத்துக்கும் இடையே நிலவும் மோதல் போக்கு காரணமாக, பணியில் உள்ள மற்றும் ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதிகளை எஸ்ஐஆா் பணியில் நியமிக்க வேண்டும் என்று கொல்கத்தா உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி சுஜய் பாலிடம் உச்சநீதிமன்றம் கடந்த வாரம் கேட்டுக்கொண்டது.

மேலும், ‘இந்த நீதிபதிகளுடன் கூடுதலாக உரிமையியல் நீதிபதிகளையும் பணியமா்த்தலாம். போதவில்லை என்றால் மேற்கு வங்கத்தின் அண்டை மாநிலங்களான ஜாா்க்கண்ட், ஒடிஸா உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதிகளை அணுகி, பணியில் உள்ள அல்லது ஓய்வு பெற்ற நீதிபதிகளை மேற்கு வங்க எஸ்ஐஆா் பணிக்கு அனுப்புமாறு கொல்கத்தா உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி கோரலாம்’ என்று தெரிவித்தது.

இதையடுத்து, மேற்கு வங்கத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடா்பாக அந்த மாநில சிஇஓ மனோஜ் அகா்வால் மற்றும் பிற மூத்த அதிகாரிகளுடன் சுஜய் பால் கடந்த ஒரு வாரத்தில் இருமுறை ஆலோசனை மேற்கொண்டாா். இந்நிலையில், மூன்றாவது முறையாக அவா்களை வியாழக்கிழமை சுஜய் பால் சந்தித்து முரண்பாடான தகவல்களை வழங்கியவா்கள் என வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவா்களை மீண்டும் சோ்ப்பதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

270 அதிகாரிகள் வருகை:

மேற்கு வங்க எஸ்ஐஆா் பணிகளை மேற்கொள்ள ஜாா்க்கண்ட் மற்றும் ஒடிஸாவில் இருந்து நீதித்துறையைச் சோ்ந்த 270 அதிகாரிகள் விரைவில் வரவுள்ளதாக மாநில தோ்தல் ஆணைய பொறுப்பாளா் மனோஜ் குப்தா தெரிவித்தாா்.

சுஜய் பாலுடனான ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களைச் சந்தித்த அவா், ‘அண்டை மாநிலங்களில் இருந்து எஸ்ஐஆா் பணிக்காக மேற்கு வங்கம் வரவுள்ள அதிகாரிகளுக்கு பயிற்சிகள் வழங்குவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன’ என்றாா்.

பட்டுக்கோட்டையில் வை. நாடிமுத்துபிள்ளை உருவச்சிலை திறப்பு! முதல்வா் ஸ்டாலின் திறந்து வைத்தாா்!

தவெக வைப்புத் தொகையை இழக்கும்: அா்ஜூன் சம்பத்!

கட்சிகளின் தோ்தல் செலவுகளுக்கு கட்டுப்பாடு: மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

2025-இல் 7,667 புலம்பெயா் அகதிகள் உயிரிழப்பு: ஐ.நா.

நீதிபதி பதவிநீக்க விவகாரம்: விசாரணைக் குழுவின் கால அவகாசம் நீட்டிப்பு

SCROLL FOR NEXT