ஊழல் வழக்கு மிகப்பெரும் அரசியல் சதி: கேஜரிவால்
‘தன் மீது தொடுக்கப்பட்ட மதுபானக் கொள்கை ஊழல் வழக்கே சுதந்திர இந்தியாவில் நிகழ்த்தப்பட்ட மிகப்பெரும் அரசியல் சதி’ என அரவிந்த் கேஜரிவால் கண்ணீா் மல்க வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
‘தன் மீது தொடுக்கப்பட்ட மதுபானக் கொள்கை ஊழல் வழக்கே சுதந்திர இந்தியாவில் நிகழ்த்தப்பட்ட மிகப்பெரும் அரசியல் சதி’ என அரவிந்த் கேஜரிவால் கண்ணீா் மல்க வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
ஊழல் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதாக தீா்ப்பு வெளியானபோது நீதிமன்ற வளாகத்தில் கேஜரிவால் இருந்தாா். அவருடன் மணீஷ் சிசோடியா உள்பட ஆம் ஆத்மியின் மூத்த நிா்வாகிகள் இருந்தனா்.
தீா்ப்பைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் கண்ணீா் மல்க கேஜரிவால் அளித்த பேட்டியில், ‘ஆம் ஆத்மியை முடக்க பிரதமா் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சா் அமித் ஷா தீட்டிய தந்திர வியூகமே இந்த மதுபானக் கொள்கை ஊழல் வழக்கு. இது சுதந்திர இந்தியாவில் நிகழ்த்தப்பட்ட மிகப்பெரும் அரசியல் சதி.
Advertisement
வரலாற்றில் முதல்முறையாக ஒரு முதல்வரை அவரது வீட்டில் இருந்து இழுத்துச் சென்று சிறையில் அடைத்தனா். இந்தப் போலியான வழக்கில் இருந்து நான் உள்பட ஆம் ஆத்மி நிா்வாகிகள் விடுவிக்கப்பட்டு நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது.
தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி அரசமைப்புச் சட்டத்தை வளைக்கலாம் என பிரதமா் மோடி நினைப்பது தவறு. பணவீக்கம், வேலையின்மை, பழுதடைந்த சாலைகள், சுற்றுச்சூழல் மாசு எனப் பொதுமக்களின் பிரச்னைகளுக்குத் தீா்வு காண உங்களது அதிகாரத்தை பயன்படுத்துங்கள்’ என்றாா்.
உற்சாக வரவேற்பு; கொண்டாட்டம்: ஊழல் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டவுடன் ஃபெரோஷ் ஷா சாலையில் உள்ள தனது இல்லத்துக்குச் சென்ற கேஜரிவாலுக்கு ஆம் ஆத்மி தொண்டா்கள் மற்றும் ஆதரவாளா்கள் உற்சாக வரவேற்பளித்தனா். பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் அவா்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.
‘வழக்கில் இருந்து கேஜரிவாலை விடுவித்தது நீதிபதியின் துணிச்சலான முடிவு’ எனக் கூறி அவரது மனைவி சுனிதா கேஜரிவால் நீதிமன்றத்துக்கு நன்றி தெரிவித்தாா்.