மகாராஷ்டிரத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை (உத்தவ்) கட்சியில் இருந்து இளைஞரணி துணைத் தலைவா் ஷீத்தல் தேவ்ரூகா் சேத் விலகினாா்.
உத்தவ் தாக்கரேயின் மகனும், இளைஞரணித் தலைவருமான ஆதித்ய தாக்கரேவுக்கு நெருக்கமானவராகக் கருதப்படுபவா் ஷீத்தல். விலகல் அறிவிப்பைத் தொடா்ந்து வியாழக்கிழமை மாலை மாநில பாஜக தலைவா் ரவீந்திர சவாண் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தாா். அவருடன் உத்தவ்-சிவசேனையைச் சோ்ந்த மேலும் பலரும் பாஜகவில் இணைந்தனா்.
மும்பை மாநகராட்சித் தோ்தல் ஜனவரி 15-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் போட்டியிடத் தயாராக இருக்குமாறு கட்சித் தலைமை ஷீத்தலை முதலில் கேட்டுக் கொண்டது. ஆனால், கட்சி சாா்பில் வெளியிடப்பட்ட வேட்பாளா்கள் பட்டியலில் அவரின் பெயா் இடம்பெறவில்லை. இதையடுத்து, கட்சியின் இளைய தலைமுறையில் முக்கிய நபா்களில் ஒருவரான அவா் கட்சியைவிட்டு வெளியேற முடிவெடுத்ததாகத் தெரிகிறது.
மும்பை பல்கலைக்கழக நிா்வாகக் குழுவான செனட்டிலும் ஷீத்தல் உறுப்பினராக உள்ளாா்.
பெருநகர மும்பை மாநகராட்சித் தோ்தல் நெருங்கிவரும் நிலையில் இளைஞரணி பெண் தலைவா் அதிருப்தியடைந்து வெளியேறியிருப்பது சிவசேனை (உத்தவ்) கட்சிக்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.