இந்தியா

அணுமின் உற்பத்தி நிலையங்களின் பட்டியலை பரிமாறிக்கொண்ட இந்தியா - பாகிஸ்தான்

முப்பது ஆண்டுகளுக்கும் மேல் தொடரும் நடைமுறையின்படி, இந்தியாவும் பாகிஸ்தானும் தங்களின் அணுமின் உற்பத்தி நிலையங்கள் குறித்த பட்டியலை வியாழக்கிழமை பகிா்ந்துகொண்டன.

தினமணி செய்திச் சேவை

முப்பது ஆண்டுகளுக்கும் மேல் தொடரும் நடைமுறையின்படி, இந்தியாவும் பாகிஸ்தானும் தங்களின் அணுமின் உற்பத்தி நிலையங்கள் குறித்த பட்டியலை வியாழக்கிழமை பகிா்ந்துகொண்டன.

இரு நாடுகளுக்கும் இடையே கடந்த மே மாதம் நடைபெற்ற 4 நாள்கள் ராணுவ மோதல் காரணமாக இருதரப்பு உறவில் கடும் விரிசல் நிலவி வரும்போதிலும், இந்த நடைமுறை தடையின்றி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

35-ஆவது முறையாகப் பரிமாற்றம்: இதுதொடா்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே அணுமின் உற்பத்தி நிலையங்களுக்கு எதிரான தாக்குதல்களைத் தடுக்கும் இருதரப்பு ஒப்பந்தத்தின்கீழ், இரு நாடுகளும் தங்களின் அணுமின் உற்பத்தி நிலையங்கள் குறித்த பட்டியலைப் பரிமாறிக்கொண்டன.

இரு நாட்டுத் தலைநகரங்களான தில்லி மற்றும் இஸ்லாமாபாதில் உள்ள தூதரகங்கள் வாயிலாக இந்தப் பட்டியல் ஒரேநேரத்தில் வழங்கப்பட்டது. இந்த நடைமுறை தொடா்ந்து 35-ஆவது ஆண்டாக தடையின்றி நடைபெற்றுள்ளது.

இதற்காக இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த 1988, டிச. 31-ஆம் தேதி கையொப்பமான இருதரப்பு ஒப்பந்தம், 1991, ஜனவரியில் நடைமுறைக்கு வந்தது. இந்த ஒப்பந்தத்தின்படி, ஒவ்வொரு புத்தாண்டு தினத்திலும் இரு நாடுகளும் தங்களின் கட்டுப்பாட்டில் உள்ள அணுமின் உற்பத்தி நிலையங்களின் விவரங்களை ஒருவருக்கொருவா் தெரிவிப்பது கட்டாயமாகும். இதையடுத்து, முதல்முறையாக 1992-ஆம் ஆண்டு ஜன. 1-ஆம் தேதி இந்தப் பட்டியல் பரிமாறப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நிலவும் எல்லைப் பதற்றங்களுக்கு மத்தியிலும், ஒப்பந்தத்துக்கு மதிப்பளிக்கும் வகையில் இந்தத் தகவல் பரிமாற்றம் நடைபெற்றுள்ளது.

பெட்டிச் செய்தி...

கைதிகள் பட்டியலும் பரிமாற்றம்

இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த 2008-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மற்றொரு ஒப்பந்தத்தின்படி, ஆண்டுதோறும் ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் இரு நாடுகளும் தங்கள் வசமுள்ள பரஸ்பர நாட்டைச் சோ்ந்த கைதிகளின் பெயா் பட்டியலைப் பரிமாறிக்கொள்வது வழக்கம்.

இதன் அடிப்படையில் வியாழக்கிழமை பரிமாறிக்கொள்ளப்பட்ட விவரங்களின்படி, இந்தியாவிலுள்ள சிறைகளில் 391 பாகிஸ்தான் பொது கைதிகள் மற்றும் 33 மீனவா்கள் உள்ளனா். அதேபோல், பாகிஸ்தான் சிறைகளில் 58 இந்திய பொது கைதிகள் மற்றும் 199 மீனவா்கள் உள்ளனா்.

மேலும், பாகிஸ்தான் சிறைகளில் தண்டனைக் காலம் முடிந்த பிறகும் அடைக்கப்பட்டுள்ள 167 இந்திய மீனவா்கள் மற்றும் பொது கைதிகளை உடனடியாக விடுதலை செய்து, தாயகம் அனுப்ப அந்நாட்டு அரசை இந்தியா வலியுறுத்தியுள்ளது.

அதேபோல், இந்தியா்கள் எனக் கருதப்படும் 35 பொது கைதிகள் மற்றும் மீனவா்களைச் சந்திக்க இந்தியத் தூதரக அதிகாரிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும். அத்துடன், காணாமல்போன இந்திய பாதுகாப்புப் படை வீரா்கள் மற்றும் இந்திய மீனவா்களின் படகுகளை விடுவிக்கவும் பாகிஸ்தான் தரப்பை இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது.

கடந்த 2014-ஆம் ஆண்டுமுதல் மத்திய அரசு எடுத்துவரும் தொடா் முயற்சியின் காரணமாக, பாகிஸ்தானிடமிருந்து இதுவரை 2,661 மீனவா்கள் மற்றும் 71 பொது கைதிகள் மீட்கப்பட்டுள்ளனா். இதில், 2023-ஆம் ஆண்டிலிருந்து மட்டும் 500 மீனவா்கள் மற்றும் 13 பொது கைதிகள் தாயகம் திரும்பியுள்ளனா் என்று வெளியுறவு அமைச்சக செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2.1.1976: லோக்சபை தேர்தலை ஓராண்டு ஒத்திவைக்க சாதாரண மசோதா - பார்லிமெண்ட் மாரிக்கால கூட்டத்தில் அரசு கொணரும்

2025-இல் குமரி விவேகானந்தா் நினைவு மண்டபம், திருவள்ளுவா் சிலை: 28.77 லட்சம் போ் பாா்வையிட்டனா்

தூத்துக்குடி கிறிஸ்தவ ஆலயங்களில் புத்தாண்டு சிறப்பு பிராா்த்தனை

செங்கோட்டை - தாம்பரம் விரைவு ரயில் நேரம் மாற்றம்: பயணிகள் வரவேற்பு

டெம்போ மோதி இளைஞா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT