இந்தூரில் ஏற்பட்ட குடிநீர் மாசுபாடு குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மத்தியப் பிரதேச மாநில அமைச்சர் கைலாஷ் விஜயவர்கியா அவரைத் தகாத சொற்களால் திட்டியது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் பகிரதப்புரத்தில் குடிநீர் மாசுபாடால், உள்ளூர்வாசிகள் பலர் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ள நிலையில், இதுவரை 4 பேர் பலியானதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது. இத்துடன், 212 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், சிகிச்சை முடிந்து இதுவரை 50 பேர் வீடு திரும்பியதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் மற்றும் அப்பகுதியின் சட்டப்பேரவை உறுப்பினரும், அம்மாநில நகர்ப்புற மேம்பாடு மற்றும் வீட்டுவசதித் துறை அமைச்சருமான விஜயவர்கியா ஆகியோர் நேற்று (டிச. 31) நேரில் பார்வையிட்டனர்.
இதையடுத்து, செய்தியாளர்களுடன் பேசிய அமைச்சர் விஜயவர்கியா இந்த விவகாரம் குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு முதலில் பொறுமையாகப் பதிலளித்து வந்தார்.
அப்போது, குடிநீர் மாசுபாட்டினால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பகிரதப்புர மக்களின் மருத்துவக் கட்டணம் திருப்பி அளிக்கப்படாதது குறித்தும், சுத்தமான குடிநீர் வழங்கப்படாதது குறித்தும் செய்தியாளர் ஒருவர் அமைச்சர் விஜயவர்கியாவிடம் கேள்வி எழுப்பினார்.
இதனால், செய்தியாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அமைச்சர் விஜயவர்கியா அவரைத் தகாத சொற்களால் திட்டியுள்ளார். இந்தச் சம்பவம் முழுவதும் பதிவான விடியோ இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
அமைச்சரின் இந்தச் செயல் கடும் கண்டனங்களைப் பெற்றதுடன், அவர் உடனடியாகப் பதவி விலக வேண்டுமென காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. இதையடுத்து, தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து அமைச்சர் விஜயவர்கியா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஏற்கெனவே, கடந்த அக்டோபர் மாதம் இந்தூரில் ஆஸ்திரேலிய வீராங்கனைகளிடம் உள்ளூர் இளைஞர் ஒருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட விவகாரத்தில் வீராங்கனைகள் குறித்து அமைச்சர் விஜயவர்கியா அவதூறான கருத்து தெரிவித்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இத்துடன், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அவரது சகோதரி பிரியங்கா காந்தி ஆகியோரைக் குறித்தும் கடந்த செப்டம்பர் மாதம் அமைச்சர் விஜயவர்கியா அவதூறாகப் பேசியதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.