ஜம்மு - காஷ்மீரில் நடைபெற்ற தனியார் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய வீரர் ஒருவர் பாலஸ்தீன கொடி ஒட்டப்பட்ட தலைக்கவசத்தை (ஹெல்மெட்) அணிந்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு - காஷ்மீரில், கடந்த புதன்கிழமை (டிச. 31) நடைபெற்ற தனியார் கிரிக்கெட் போட்டிகளில், ஜேகே 11 எனும் உள்ளூர் கிரிக்கெட் அணியைச் சேர்ந்த ஃபுர்கான் உல் ஹக் எனும் வீரர் பாலஸ்தீன கொடி ஒட்டப்பட்ட தலைக்கவசத்தை அணிந்து விளையாடியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, இந்தப் போட்டியின் விடியோக்கள் இணையத்தில் வைரலாகின. இதனால், இந்த விவகாரம் தொடர்பாக ஃபுர்கான் உல் ஹக் மற்றும் போட்டி ஒருங்கிணைப்பாளர் சாஹித் பட் ஆகியோர் நேரில் ஆஜராக டோமானா காவல் துறையினர் சம்மன் அனுப்பினர்.
இந்த நிலையில், நேரில் ஆஜரான வீரர் ஃபுர்கான் உல் ஹக் மற்றும் போட்டி ஒருங்கிணைப்பாளர் ஆகியோரிடம் டோமானா காவல் துறையினர் 14 நாள் முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன், இதுபோன்ற சம்பவங்கள் ஏற்புடையது அல்ல என்றும், இது இந்தியாவின் அதிகாரப்பூர்வ வெளியுறவுக் கொள்கை நிலைப்பாடு குறித்த முழுமையான அறியாமையின் பிரதிபலிப்பு என்றும் ஜம்மு - காஷ்மீரின் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.எஸ். பதானியா கூறியுள்ளார்.
மேலும், இந்த விவகாரத்தில் காவல் துறையினர் முழுமையான விசாரணை மேற்கொள்ள வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.