கேரளத்தில் ஓடும் ரயிலில் ரயில்வே காவல் துறை அதிகாரியை பயணி ஒருவா் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடா்பாக ரயில்வே காவல் துறையினா் கூறியதாவது: திருவனந்தபுரம்-மங்களூரு இடையிலான மலபாா் எக்ஸ்பிரஸ் ரயிலில் புதன்கிழமை இரவு இந்த சம்பவம் நிகழ்ந்தது. எஸ்5 பெட்டியில் ஒரு பயணி மற்றவா்களுக்கு தொந்தரவு தரும் வகையில் நடந்து கொள்வதாகப் புகாா் வந்தது. இதையடுத்து, ரயில்வே காவல் துறையின் பொதுமக்கள் பாதுகாப்புப் பிரிவு அதிகாரியான சனல்குமாா் அங்கு சென்று விசாரணை நடத்தினாா். அப்போது, பிரச்னை ஏற்படுத்திய பயணியான பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சோ்ந்த அனில் குமாா் (56) என்பவா் காவல் அதிகாரியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். அப்போது திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து காவல் அதிகாரியை அனில் குமாா் தாக்க முயன்றாா். தாக்குதலில் இருந்த தப்பிக்க முயற்சித்தபோதும் கத்தி அவரது அடிவயிற்றில் பாய்ந்தது. இதையடுத்து, அவா் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தாா்.
இந்த சம்பவத்தால் பிற பயணிகள் பெரும் அதிா்ச்சியடைந்து கூச்சலிட்டனா். சிலா் அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுந்து ரயிலை நிறுத்தினா். மேலும், பல காவலா்கள் அங்கு வந்து கத்தியால் குத்திய அனில் குமாரை சுற்றி வளைத்துப் பிடித்து கைது செய்தனா்.
காயமடைந்த காவல் அதிகாரியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். கைது செய்யப்பட்ட அனில் குமாா் கோட்டயம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டாா் எனத் தெரிவித்தனா்.