இந்தூர் குடிநீர் மாசுபாடு விவகாரம் தொடர்பாக, மத்தியப் பிரதேச அரசுக்கு பாஜக மூத்த தலைவரும், அம்மாநில முன்னாள் முதல்வருமான உமா பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் சுத்தமான நகரமாகக் கருதப்படும் இந்தூரின் பகிரதபுரத்தில், கழிவுநீர் கலந்து குடிநீரைக் குடித்த உள்ளூர்வாசிகள் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விவகாரத்தில், 4 பேர் மட்டுமே பலியானதாக அரசு தரப்பில் கூறப்படும் நிலையில் 13 பேர் பலியானதாக உள்ளூர்வாசிகள் கூறுவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அசுத்தமான குடிநீரால் அப்பகுதியில் வசித்து வரும் சுமார் 1400 பேர் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இந்தூரில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் தலைமையிலான பாஜக அரசுதான் காரணம் எனக் குறிப்பிட்டு பாஜகவின் மூத்த தலைவரும், அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான உமா பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவுகளில் கூறப்பட்டதாவது:
“அசுத்தமான குடிநீரால் 2025 ஆம் ஆண்டின் இறுதியில் இந்தூரில் ஏற்பட்ட மரணங்கள் நமது மாநிலம், அரசு மற்றும் முழு அமைப்புக்கும் அவமானத்தையும் களங்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சுத்தமான நகரம் என விருது பெற்ற இந்தூரில் விஷம் கலந்த தண்ணீர் பல உயிர்களைப் பலிவாங்குவது பெரும் அவமானம். பலி எண்ணிக்கைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன” எனக் கூறியுள்ளார்.
இத்துடன், அரசு இழப்பீடு வழங்குவதில் மட்டுமே கவனம் செலுத்துவதாகக் குற்றம்சாட்டிய முன்னாள் முதல்வர் உமா பாரதி கூறியதாவது:
“மனித உயிரின் விலை ரூ. 2 லட்சம் அல்ல. அவர்களது குடும்பங்கள் வாழ்க்கை முழுவதும் துயரத்துடன் வாழ்வார்கள். இந்தப் பாவத்திற்கு அனைவரும் மனம் வருந்த வேண்டும்.
பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கோர வேண்டும். இதற்கு காரணமான அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.