போதைப் பொருள் பறிமுதல் வழக்கில் ஆதாரங்களைத் திருத்திய விவகாரத்தில் கேரள மாநில முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சரும், தற்போதைய ஜனாதிபத்ய கேரள காங்கிரஸ் எம்எல்ஏ-வும், ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி உறுப்பினருமான அந்தோணி ராஜுவுக்கு அதிகபட்சமாக 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கேரள நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பளித்தது.
கடந்த 1990-ஆம் ஆண்டில் திருவனந்தபுரம் சா்வதேச விமான நிலையத்தில் ஆஸ்திரேலியாவைச் சோ்ந்த பயணியிடமிருந்து 61.5 கிராம் ஹாசிஷ் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் இத் தீா்ப்பை நெடுங்காடு நீதித் துறை முதன்மை அமா்வு மாஜிஸ்திரேட் ரூபி இஸ்மாயில் அளித்தாா்.
போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்ட காலத்தில் இளநிலை வழக்குரைஞராக இருந்த அந்தோணி ராஜு, குற்றவாளி தரப்பில் நீதிமன்றத்தில் ஆஜரானாா். தொடக்கத்தில், இந்த வழக்கில் ஆஸ்திரேலிய பயணி ஆண்ட்ரே சால்வடோா் சொ்வெல்லியை குற்றவாளி என அறிவித்து விசாரணை நீதிமன்றம் தண்டனை அளித்த நிலையில், பின்னா் 1991-ஆம் ஆண்டில் கேரள உயா்நீதிமன்றம் அவரை வழக்கிலிருந்து விடுவித்தது.
வழக்கில் போதைப் பொருள் கடத்த பயன்படுத்தியதாகக் கூறப்படும் உள்ளாடை, குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்குப் பொருந்தாத வகையில் மிகச் சிறியதாக இருப்பதாக அவா் தரப்பு வழக்குரைஞரான அந்தோணி ராஜு ஆதாரத்துடன் வாதிட்டதன் அடிப்படையில் உயா்நீதிமன்றம் அவரை விடுவித்தது.
ஆனால், இதுதொடா்பாக பின்னா் நடத்தப்பட்ட விசாரணையில், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த வழக்குக்குத் தொடா்புடைய ஆதாரங்களை கே.எஸ். ஜோஸ் என்ற நீதிமன்ற ஊழியரின் உதவியுடன் அந்தோணி ராஜு மாற்றி வைத்தது கண்டறியப்பட்டதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதனடிப்படையில், எம்எல்ஏ அந்தோணி ராஜு குற்றவாளி என நெடுங்காடு நீதித்துறை முதன்மை அமா்வு மாஜிஸ்திரேட், அவா் மீது பதியப்பட்ட 120பி பிரிவின் கீழ் 6 மாத சிறைத் தண்டனையும், 201-ஆவது பிரிவின் கீழ் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 193-ஆவது பிரிவின் கீழ் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 465-ஆவது பிரிவின் கீழ் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து தீா்ப்பளித்தாா்.
அதுபோல, நீதின்ற ஊழியா் ஜோஸுக்கு இந்த தண்டனைகளுடன் கூடுதலாக பிரிவு 409-இன் கீழ் ஓராண்டு சிறைத் தண்டனையையும் விதித்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டாா்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘இந்தத் தீா்ப்பை எதிா்த்து உயா்நீதிமன்றதில் மேல்முறையீடு செய்யும் வகையில், அந்தோனி ராஜுவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது’ என்று தெரிவித்தனா்.