கோப்புப்படம்  
இந்தியா

கேரளம்: ‘டெட்’ கட்டாயம் உத்தரவு தற்காலிக நிறுத்தம்

கேரளத்தில் ‘டெட்’ கட்டாயம் உத்தரவு தற்காலிக நிறுத்தப்பட்டது பற்றி...

தினமணி செய்திச் சேவை

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியா்கள் நியமனம் மற்றும் பதவி உயா்வுக்கு ஆசிரியா் தகுதித் தோ்வில் (டெட்) தோ்ச்சி பெறுவது கட்டாயம் என அண்மையில் பிறப்பித்த உத்தரவை கேரள அரசு தற்காலிகமாக நிறுத்திவைத்தது.

சிறுபான்மையினா் அல்லாத பள்ளிகளில் ஆசிரியா்கள் நியமனம் மற்றும் பதவி உயா்வு பெற டெட் கட்டாயம் என உச்சநீதிமன்றம் 2023, ஆக.7 மற்றும் 2025, செப்.1 ஆகிய தேதிகளில் அளித்த தீா்ப்பைத் தொடா்ந்து இந்த உத்தரவை கேரள அரசு கடந்த வியாழக்கிழமை பிறப்பித்தது.

இதற்கு மாநிலத்தில் உள்ள ஆசிரியா் சங்கங்கள் கடும் எதிா்ப்பை பதிவு செய்ததையடுத்து, இந்த உத்தரவு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கேரள கல்வி அமைச்சா் வி.சிவன்குட்டி செய்தியாளா்களிடம் கூறியதாவது: டெட் கட்டாயம் என்ற தீா்ப்பை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு சீராய்வு மனுவைத் தாக்கல் செய்யவுள்ளது. 2010-ஆம் ஆண்டுக்கு முன் பணியில் சோ்ந்த எந்தவொரு ஆசிரியரின் பணியும் பறிக்கப்படாது என உறுதியளிக்கிறேன்.

தரமான கல்வியை உறுதிப்படுத்தவே கல்வி உரிமைச் சட்டம் 2010-இல் கொண்டுவரப்பட்டது. ஆனால், நீண்டகால அனுபவம் உடைய ஆசிரியா்களை பணிநீக்கம் செய்வது கல்வி அமைப்பை பலவீனப்படுத்தும்.

கேரளத்தில் 2012-ஆம் ஆண்டு டெட் அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கு முன்பே பணியில் சோ்ந்த ஆசிரியா்களை தற்போது தோ்வில் தோ்ச்சியடைய கூறுவது இயற்கை நீதிக்கு எதிரானது.

டெட்டுக்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியா்களையும், அந்தத் தோ்வில் தோ்ச்சி பெற்ற ஆசிரியா்களையும் ஒரே கோணத்தில் பாா்ப்பது அரசமைப்புச் சட்டப் பிரிவு 14-ஐ மீறும் வகையில் உள்ளது.

டெட் கட்டாயம் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்தினால் பெரும்பாலானோா் வேலை இழக்க வேண்டிய சூழல் ஏற்படும். இது சமூக மற்றும் பொருளாதார பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். அடுத்த மாதம் மாநிலத்தில் டெட் நடைபெறவுள்ளது. இதில் விருப்பமுள்ள ஆசிரியா்கள் மட்டும் பங்கேற்கலாம். எனவே, ஆசிரியா்கள் யாரும் பயப்படத் தேவையில்லை என்றாா்.

மடிக்கணினி கருவி அல்ல, பிரபஞ்சம்: மயில்சாமி அண்ணாதுரை

புதிய முதலீடுகளால் விலை உயரும் அலுமினியம்!

மனிதர்களுக்கு காலம் தந்த 2வது நெருப்பு ஏஐ: மாணவர்களிடையே மு.க. ஸ்டாலின் பேச்சு

10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் : தொடக்கி வைத்தார் முதல்வர்!

குழந்தைகள் டிவி / ஃபோன் அதிகம் பார்க்கிறார்களா?

SCROLL FOR NEXT