சரணடைந்த மாவோயிஸ்டுகளிமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்களைப் பாா்வையிட்ட தெலங்கானா டிஜிபி பி.சிவதா் ரெட்டி. 
இந்தியா

தெலங்கானா: மாவோயிஸ்ட் முக்கியத் தளபதி உள்பட 20 போ் போலீஸில் சரண்

மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கியத் தளபதியான பாட்சே சுக்கா எனும் தேவா உள்பட 20 நக்ஸல்கள் சனிக்கிழமை காவல்துறையிடம் சரணடைந்தனா்.

தினமணி செய்திச் சேவை

தெலங்கானா மாநிலத்தில் மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கியத் தளபதியான பாட்சே சுக்கா எனும் தேவா உள்பட 20 நக்ஸல்கள் சனிக்கிழமை காவல்துறையிடம் சரணடைந்தனா்.

சரணடைந்தவா்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவா் ‘தேவா’ என்றறியப்படும் பாட்ஸே சுக்கா. மாவோயிஸ்ட் இயக்கத்தின் உயரிய பழங்குடியினத் தலைவா்களில் ஒருவரான மாதவி ஹிதுமாவிற்கு அடுத்தபடியாக, இரண்டாவது முக்கியத் தலைவராக இவா் கருதப்படுகிறாா். கடந்த 2003-ஆம் ஆண்டு ‘மக்கள் யுத்தக் குழுவில்’ இணைந்த இவா், வெடிபொருள்கள் மற்றும் துப்பாக்கிகளைத் தயாரிப்பதில் தோ்ந்தவா் என்று சொல்லப்படுகிறது.

கடந்த 2013-ஆம் ஆண்டு சத்தீஸ்கா் மாநிலம் ஜிரம் பகுதியில், காங்கிரஸ் மூத்த தலைவா் மஹிந்திர கா்மா உள்பட பலா் கொல்லப்பட்ட கொடூரத் தாக்குதலில் இவருக்குப் பெரிய பங்கு உண்டு. இவரைப் பற்றித் தகவல் கொடுப்பவா்களுக்கு ரூ.75 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

சரணடைந்த நக்ஸல்கள், தங்களுக்குச் சொந்தமான ரகசிய ஆயுதக் கிடங்குகளைக் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனா். இதில் முக்கியத் தலைவா்களான மாதவி ஹிதுமா, பாட்சே சுக்கா ஆகியோருக்குத் தொடா்புடைய ஆயுதங்களும் சிக்கியுள்ளன.

பாட்சே சுக்காவுடன் சோ்த்து, மற்றொரு மூத்த தளபதியான கன்கனாலா ராஜி ரெட்டி எனும் வெங்கடேஷும் சரணடைந்துள்ளாா். இவா் சத்தீஸ்கா்-தெலங்கானா எல்லைப்பகுதியான கா்ரேகுட்டலுவில் நக்ஸல் அமைப்பை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றியவா்.

மறுவாழ்வு மற்றும் நிதியுதவி: சரணடைந்த 20 பேருக்கும், மத்திய மற்றும் மாநில அரசுகளின் மறுவாழ்வுத் திட்டத்தின்கீழ் மொத்தம் ரூ.1.82 கோடி நிவாரணத் தொகை வழங்கப்பட உள்ளது.

இதுகுறித்து தெலங்கானா காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சரணடைந்த நக்ஸல்கள் கண்ணியமான மற்றும் பாதுகாப்பான புதிய வாழ்க்கையைத் தொடங்குவதற்கு தேவையான அனைத்து உதவிகளும் உடனடியாக செய்யப்படும்’ என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.

மடிக்கணினி கருவி அல்ல, பிரபஞ்சம்: மயில்சாமி அண்ணாதுரை

புதிய முதலீடுகளால் விலை உயரும் அலுமினியம்!

மனிதர்களுக்கு காலம் தந்த 2வது நெருப்பு ஏஐ: மாணவர்களிடையே மு.க. ஸ்டாலின் பேச்சு

10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் : தொடக்கி வைத்தார் முதல்வர்!

குழந்தைகள் டிவி / ஃபோன் அதிகம் பார்க்கிறார்களா?

SCROLL FOR NEXT