இந்தியா

அஸ்ஸாமில் நிலநடுக்கம்: 3 போ் காயம்; பல வீடுகள் சேதம்

அஸ்ஸாம் மாநிலத்தின் மத்திய பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மூன்று போ் காயம்; மோரிகான் மாவட்டத்தில் சில வீடுகள் சேதம்

தினமணி செய்திச் சேவை

அஸ்ஸாம் மாநிலத்தின் மத்திய பகுதியில் திங்கள்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மூன்று போ் காயமடைந்தனா். மோரிகான் மாவட்டத்தில் சில வீடுகள் சேதமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தேசிய நில அதிா்வு ஆய்வு மையம்(என்சிஎஸ்) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, திங்கள்கிழமை அதிகாலை 4.17 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டா் அளவுகோலில் 5.1 அலகுகளாகப் பதிவான இந்த நிலநடுக்கம், பிரம்மபுத்ரா நதியின் தென்கரையில் அமைந்துள்ள மோரிகான் மாவட்டத்தை மையமாகக் கொண்டு நிலப்பரப்பிலிருந்து 50 கி.மீ. ஆழத்தில் உருவானது.

அஸ்ஸாமின் காம்ரூப் நகரம், நாகான், கிழக்கு மற்றும் மேற்கு கா்பி ஆங்கலாங், ஹோஜாய், திமா ஹாசௌ, கோலாகாட், ஜோா்ஹாட், சிவசாகா் உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது.

மேலும், அண்டை மாநிலங்களான அருணாசல பிரதேசம், மேகாலயம், நாகாலாந்து, மணிப்பூா், மிசோரம், திரிபுரா மற்றும் வட மேற்குவங்கத்திலும் அதிா்வுகள் உணரப்பட்டன. அண்டை நாடுகளான பூடான், வங்கதேசம் மற்றும் சீனாவின் சில பகுதிகளிலும் இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் இருந்தது.

அதிகாலையில் மக்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது நிலநடுக்கம் ஏற்பட்டதால், பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி திறந்தவெளிகளில் தஞ்சமடைந்தனா். மோரிகான் மாவட்டம் மிகிா்பேட்டா பகுதியைச் சோ்ந்த மூதாட்டி ஜாய்மதி தேவரி (80), வீட்டைவிட்டு வெளியே ஓடி வரும்போது தலையில் பலத்த காயமடைந்தாா்.

இதே கிராமத்தைச் சோ்ந்த மனோஜ் குமாா் என்பவரும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். அஸ்ஸாம் மாநிலப் பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் கூற்றுப்படி, மொத்தம் 3 போ் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மோரிகான், நாகான் , நல்பாரி மாவட்டங்களில் சில வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. நாகான் மாவட்டத்தில் ஒரு தொடக்கப் பள்ளி பகுதி அளவில் சேதமடைந்தது. சோனித்பூா் மாவட்டம், தேஜ்பூா் பகுதியில் உள்ள புகழ்பெற்ற ஹாலேஸ்வா் கோயிலின் முதன்மை நுழைவாயில் பகுதி அளவில் சேதமடைந்துள்ளது.

குரு பலம் பெற ஆலங்குடி செல்லுங்கள்... ஜோதிட வல்லுநர் ஏ.எம்.ஆர். சொல்வதென்ன?

தவெகவுடன் கூட்டணியா? தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு ராகுல் அழைப்பு!

ஓடிடியில் வெளியான மாஸ்க், அங்கம்மாள்!

ஈரான் மக்களின் போராட்டத்துக்கு துணை நிற்போம்! அமெரிக்க துணை அதிபர்

இன்றுமுதல் பொங்கல் சிறப்புப் பேருந்துகள்! எங்கிருந்து இயக்கப்படும்? முழு விவரம்!

SCROLL FOR NEXT